நடிகர் அஜித் குமார், நேற்று தன்னுடைய மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் உடன் கோவிலுக்கு சென்றிருந்த புகைப்படங்கள் வைரலானது. அதில் அஜித் நெஞ்சில் டாட்டூ ஒன்றை குத்தி இருந்தார். அதன் பின்னணியை பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் எந்தவித பின்புலமும் இன்றி சுயம்பாக முன்னேறியவர் அஜித் குமார். சினிமாவில் அறிமுகமானபோது தொடர் தோல்விகளை சந்தித்த அஜித், பின்னர் வெற்றிப் பாதைக்கு திரும்பினார். அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த அஜித்துக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அதை நன்கு பயன்படுத்திக் கொண்ட அவர், படிப்படியாக மாஸ் ஹீரோவாக உருவெடுத்தார். ஒருகட்டத்தில் தனக்காக இருந்த ரசிகர் மன்றங்களை எல்லாம் அஜித் கலைத்தாலும், அவருக்கான ரசிகர் கூட்டம் என்பது குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.
24
2 படங்கள் ரிலீஸ்
நடிகர் அஜித்துக்கு 2025-ம் ஆண்டு மறக்க முடியாத ஒன்றாக அமைந்திருக்கிறது. ஏனெனில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் அவர் நடித்த இரண்டு படங்கள் இந்த ஆண்டு திரைக்கு வந்துள்ளன. அதில் பிப்ரவரி மாதம் ரிலீஸ் அன விடாமுயற்சி படம் படுதோல்வியை சந்தித்தாலும், அதைத் தொடர்ந்து ஏப்ரலில் திரைக்கு வந்த குட் பேட் அக்லி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து அஜித்தின் மார்க்கெட்டை தூக்கிப் பிடித்தது. அப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.240 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்தது. நடிகர் அஜித்தின் கெரியரில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையையும் குட் பேட் அக்லி படைத்தது.
34
அடுத்த படம்
குட் பேட் அக்லி படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் அஜித், கார் ரேஸில் பிசியாக இருந்த நிலையில், தற்போது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்க உள்ளார். இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ராகுல் தயாரிக்கிறார். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நவம்பர் மாதம் முதல் ஷூட்டிங்கை தொடங்க திட்டமிட்டு உள்ளனர். இது அஜித்தின் 64வது படமாகும்.
ஏகே 64 படத்தின் ஷூட்டிங் தொடங்கும் முன்னர் நடிகர் அஜித் தன்னுடைய மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் உடன் கேரள மாநிலம் பாலக்காடில் உள்ள தன்னுடைய குல தெய்வமான ஊட்டுக்குளங்கரா பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். நடிகர் அஜித்தின் தந்தை பாலக்காடைச் சேர்ந்தவர் என்பதால், அவர்களின் குலதெய்வமாக ஊட்டுக்குளங்கரா பகவதி அம்மன் கருதப்படுகிறது. அங்கு அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வெளியாகின.
அதில் அவர் நெஞ்சில் சாமி உருவத்தை பச்சை குத்தி இருப்பது தெரியவந்தது. அதைப்பார்த்த நெட்டிசன்கள் அது என்ன சாமி என்பதை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி அவர் தன்னுடைய குல தெய்வமான ஊட்டுக்குளங்கரா பகவதி அம்மனின் உருவத்தை தான் தன் நெஞ்சில் பச்சை குத்தி இருக்கிறார். இது அவர் அந்த கடவுள் மீது வைத்திருக்கும் அன்பைக் காட்டுகிறது.