கிழக்கே போகும் ரயில் படம் மூலம் ஆரம்பித்த ராதிகாவின் திரைப்பயணம் என்கிற ரயில் தற்போது 42 ஆண்டுகளை தாண்டியும் வெற்றிகரமாக பயணித்து வருகிறது.
வெள்ளித்திரையில் சிகரம் தொட்ட ராதிகா தற்போது சின்னத்திரை ராணியாக வலம் வருகிறார். சித்தி 2 படப்பிடிப்பில் பிசியாக நடித்து வரும் ராதிகாவுக்கு இன்று பிறந்தநாள்.
பிறந்தநாளை முன்னிட்டு அவருடயை திரைப்பயணம் பற்றி சில சுவாரஸ்யங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். முதலில் பாரதிராஜாவுக்கு ராதிகா, எம்.ஆர்.ராதாவின் மகள் என்பதே தெரியாதாம். அதன் பின்னர் ஷூட்டிங் ஸ்பார்ட்டில் யாரோ சொன்ன தகவலைக் கேட்டு தான் எம்.ஆர்.ராதாவை போய் சந்தித்துள்ளார்.
ராதிகாவை நடிக்க வைக்க போகிறேன் என சொன்ன போது, எம்.ஆர்.ராதா கூட நக்கலாக சிரித்துள்ளார். ஆனால் முதல் பட படப்பிடிப்பில் இருந்த ராதிகாவை சந்தித்த அவர் திலகமிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.
ராதிகாவிற்கு தனது திரை வாழ்க்கையிலேயே மிகவும் பிடித்த நடிகர் என்றால் அது அமிதாப் பச்சன் தானாம். அவருடைய எளிமை, பிறரிடம் பழகும் குணம், இயல்பு ஆகிய குணத்தால் அவரை மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார்.
சீரியலில் கூட ராதிகா பெண்களை அவமதிப்பது போன்ற கதாபாத்திரங்களை வைக்க அனுமதிப்பதில்லை. எப்போதும் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை கொடுக்க வேண்டும் என்பதில் கறாரான முடிவில் இருக்கிறார்.
57 வயதிலும் ராதிகாவின் அழகிற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் காரணம் சரத்குமார் தானாம். உணவு கட்டுப்பாடு, உடற் பயிற்சி என இரண்டிலும் சரியாக திட்டமிட்டு இருவரும் ஒன்றாக பயணிக்கிறார்களாம். மேலும் எதையும் நேர்மறையாக எடுத்துக்கொள்ளும் இருவரது வழக்கம் தான் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு காரணம் எனக்கூறியுள்ளார்.