பார்ப்பதற்கு யங் ஹீரோ போல இருக்கும் சாண்டல்வுட்டின் பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் இல்லை என்கிற செய்து தற்போது வரை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.
நடிகர் என்பதை தாண்டி, தயாரிப்பாளராகவும், சிறந்த நடனக் கலைஞராகவும், திரையுலகை சேர்ந்த அனைவருடனும் எப்போதும் அன்பாக பழகும் நண்பராகவும் இருந்தவர்.
இவர் கடைசியாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், Bhajarangi2 பட குழுவினருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து பதிவு போட்டிருந்தார்.
இதற்க்கு முன்னதாக அக்டோபர் 27 ஆம் தேதி இவர் தயாரிக்க உள்ள வனவிலங்கு திரைப்படம் குறித்த பதிவை தான் கடைசியாக போட்டிருந்தார்.
அதில் '10 வருடங்களுக்கு முன் ஒரு கதை பிறந்தது. எங்கள் மக்கள், எங்கள் மண்ணின் பெருமை. எங்கள் உலகம் முழுவதும் பரவியுள்ளது. தலைமுறைகளுக்கு உத்வேகம் கொடுக்க கூடிய கதை. அந்த வரலாற்றை மீட்டெடுக்கும் நேரம் வந்துவிட்டது' என்று பதிவிட்டிருந்தார். இப்படத்தை அமோகவர்ஷா என்பவர் இயக்க இருந்தார். லாக்டவுனின் போது காடுகளில் அலைந்து திரிந்து, இயற்கையின் மகிமையை வெளியே கொண்டு வரும் முயற்சி தான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்பட்டது.
ஒரு சுற்றுச்சூழல் சாகச அடிப்படையிலான இந்தப் படத்தின் மூலம் கர்நாடகாவின் வனவிலங்குகளைப் பார்க்கலாம். 90 நிமிடம் ஓடும் இப்படத்தின் டிரைலரை விரைவில் வெளியிட புனித் ராஜ்குமார் முடிவு செய்திருந்தார். இது ஓடிடியில் வெளியிட இருந்ததாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.