விஜய்யின் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான சிறு பட்ஜெட் படம் தான் லவ் டுடே. கோமாளி படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள இப்படத்தில் இவானா, யோகிபாபு, ரவீனா ரவி, சத்யராஜ், ராதிகா சரத்குமார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார்.
இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். இப்படத்தில் இவரைவிட யாரும் சிறப்பாக நடித்திருக்க முடியாது என சொல்லும் அளவுக்கு பிரதீப்பின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தன. இப்படம் இவ்ளோ பெரிய வெற்றிப்படமாக அமைந்ததற்கு இதன் கதை தான் காரணம். படம் பார்க்கும் ஒவ்வொரு இளைஞரும் தங்களை படத்துடன் கனெக்ட் செய்துகொள்ளும் படியான காட்சிகள் அதிக அளவில் படத்தில் உள்ளதால் தான் இப்படம் இந்த அளவுக்கு வரவேற்பை பெற்று வருகிறது.
ரிலீசானது முதல் பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வரும் இப்படம், முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பி வருகிறது. ரிலீசாகி கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆக உள்ள நிலையிலும் பெரும்பாலான தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருகிறது இப்படம். வெறும் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது அதைவிட 10 மடங்கு அதிக வசூலை ஈட்டி உள்ளது.