இசை உலகின் ஜாம்பவானாக இருந்த எம்.எஸ்.விஸ்வநாதனை பாடலாசிரியர் ஒருவர் அழ வைத்த நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
திரையுலகில் ‘மக்கள் கவிஞர்’ என்று போற்றப்பட்டவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். தனது கூர்மையான வரிகளால் பலரையும் வியக்க வைத்த அந்த கவிஞர் மெல்லிசை மன்னர் எம்.எஸ் விஸ்வநாதனை தேம்பித் தேம்பி அழ வைத்துள்ளார். அந்த நெகிழ்ச்சியான சம்பவத்தின் பின்னணி குறித்து இங்கு பார்க்கலாம்.
27
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
தஞ்சை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திரைப்படங்களில் பாடல் எழுதுவதற்காக வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தார். 1955 ஆம் ஆண்டு வெளியான ‘மகேஸ்வரி’ என்கிற படத்தில் ஐந்து பாடல்களை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியிருந்தார். இந்த படம் தோல்வி படமாக அமைந்தது. பின்னர் அடுத்து அவர் பாடல் எழுதிய ‘படித்த பெண்’ என்ற படமும் தோல்வி படமாக அமைந்தது. அவர் எழுதிய இரண்டு படங்களும் தோல்வியைத் தழுவியதால் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தை பாடல் எழுதுவதற்கு யாருமே அணுகவில்லை.
37
‘பாசவலை’ திரைப்படம்
இதற்கிடையில் அவருக்கு மார்டன் தியேட்டரில் மேனேஜராக பணிபுரிந்த சுலைமான் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. அந்த சமயத்தில் மார்டன் தியேட்டர் நிறுவனம் ‘பாசவலை’ என்கிற திரைப்படத்தை தயாரித்துக் கொண்டிருந்தது. இதற்கு எம்.எஸ் விஸ்வநாதன் இசையமைப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார். படத்தின் கதாநாயகன் எம்.கே ராதா ஒரு மன்னன். மன்னனின் சகோதரன் ஒரு பெண்மீது ஆசை ஏற்பட்டு தவறு செய்கிறான். இதற்கு மக்கள் மன்னரிடம் நியாயம் கேட்கின்றனர். தனது சகோதரனாக இருந்தாலும் தண்டிக்கிறேன் என்று சொல்லி சகோதரனை தேடுகிறார். ஆனால் அவர் தப்பித்து ஓடுகிறார்.
சகோதரனை தப்பிக்க வைத்ததே மன்னர் தான் என்று மக்கள் மன்னர் மீது கோபம் அடைகின்றனர். இதை பார்த்து ஆத்திரமடையும் மன்னன் பதவியை விட்டு நீங்கி, வனவாசம் சென்று விடுகிறார். வனத்தில் தன் குழந்தைகளுக்கு உணவு தேடி அலைந்து கொண்டிருக்கிறார். அப்போது மன்னரின் மனைவி குழந்தைகள் அனைவரும் வேறு பாதையில் தொலைந்து விடுகின்றனர். மனைவி மற்றும் குழந்தைகளை தேடி அலையும் மன்னனுக்கு தாகம் எடுப்பதால் ஒரு குளத்தில் தண்ணீர் குடிக்கிறார். ஆனால் திருடர்கள் பயம் காரணமாக ஆடு மேய்க்க வருபவர்கள் குளத்தில் விஷத்தை கலந்து வைக்கின்றனர். இந்த தண்ணீரை குறித்த மன்னன் மயங்கி விழுகிறார்.
57
திருப்தி தராத வரிகள்
ஆடு மேய்ப்பவர்கள் மன்னரை காப்பாற்றுகின்றனர். இருந்தாலும் அவருக்கு சுயநினைவு இல்லாமல் பைத்தியமாக மாறுகிறார். அப்போது ஓடிப்போன தம்பி திரும்பி வந்து மன்னரிடம் மன்னிப்பு கேட்கிறார். ஆனால் மன்னருக்கு அவரை அடையாளம் தெரியவில்லை. இந்த சூழலுக்கு ஏற்றவாறு பாடல் வரிகள் எழுத வேண்டும். உடுமலை நாராயணன், மருதகாசி, கண்ணதாசன் ஆகிய எழுதிய பாடல்கள் எம்.எஸ் விஸ்வநாதனுக்கு திருப்தி தரவில்லை. இதை பார்த்த சுலைமான் பட்டுக்கோட்டையார் குறித்து எம்.எஸ்.விக்கு தகவல் கொடுக்கிறார்.
67
கண்ணீர் வடித்த எம்.எஸ்.வி
ஆனால் அனுபவம் வாய்ந்தவர்களாலேயே பாடல் எழுத முடியவில்லை. இந்த சிறு பையன் எப்படி பாடல் எழுதப் போகிறான் என்று சொல்லி பட்டுக்கோட்டையாரின் பாடலை எம்எஸ்.வி நிராகரிக்கிறார். அடுத்த நாள் மீண்டும் சுலைமான் பட்டுக்கோட்டை குறித்து சொல்ல எம்.எஸ்.வி மீண்டும் மறுத்து விடுகிறார். மூன்றாவது நாள் விரக்தியில் இருக்கும் எம்.எஸ்.வியிடம் சுலைமான் மீண்டும் பட்டுக்கோட்டையார் குறித்து கூறுகிறார். அப்போதும் சுலைமானை திட்டி அனுப்பும் எம்.எஸ்.வி அடுத்த சில நிமிடங்களில் பட்டுக்கோட்டையார் எழுதிய பாடலைக் கொண்டு வருமாறு கூறுகிறார் அந்தப் பாடல் வரிகளை பார்த்த எம்.எஸ்.வி கதறி அழுகிறார்.
77
எம்.எஸ்.வியின் சபதம்
எந்த சூழலுக்கு பாடல் எழுத முடியாமலும், டியூன் வராமலும் திணறினாரோ அந்த பாட்டுக்கு கச்சிதமான வரிகளை பட்டுக்கோட்டையார் எழுதியிருந்தார். அந்த பாடல் தான், “உனக்கெது சொந்தம், எனக்கெது சொந்தம், உலகத்துக்கு எது தான் சொந்தமடா..” என்கிற பாடல். அந்தப் பாடலுக்கு டியூன் போட்ட எம்.எஸ்.வி ரெக்கார்டிங்கிற்கு அனுப்பி விட்டு உடனடியாக பட்டுக்கோட்டையாரை அழைத்து வரச் சொல்கிறார். அதற்கு முன்பாக கடவுள் புகைப்படத்திற்கு முன் நின்று, “ஆண்டவா, எனக்கு இவ்வளவு கர்வத்தை கொடுத்து விட்டாயே? மூன்று நாட்கள் அந்த கவிஞரை காக்க வைத்து விட்டேனே, எனக்கு ஏன் இவ்வளவு தலைக்கணத்தை கொடுத்தாய்” என்று கேட்டு அழுதுள்ளார்.
இளம் வயதில் மறைந்த பட்டுக்கோட்டையார்
அதன் பிறகு யார் வந்தாலும் அவரிடம் என்ன திறமை இருக்கிறது என்பதைத் தான் முதலில் பார்க்கப் போகிறேன் என சபதம் எடுத்துள்ளார். அதன் பின்னர் பலருக்கும் வாய்ப்பு அளித்திருக்கிறார் எம்.எஸ்.வி. அதன் பின்னர் எம்.எஸ்.வி இசையமைப்பில் பல பாடல்களை எழுதி உள்ளார் பட்டுக்கோட்டையார். ஆனால் விதி வசத்தால் தனது 29 வயதிலேயே பட்டுக்கோட்டையார் மறைந்த போது எம்.எஸ்.வி, “எனது ஒரு பாதியை இழந்துவிட்டேன்” என்று கூறி கண்ணீர் வடித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.