அட்லீ பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகி உள்ள திரைப்படம் ஜவான். இப்படத்தில் ஷாருக்கான் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாராவும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், ஜவான் படத்தின் Prevue இன்று வெளியிடப்பட்டு உள்ளது.
அட்லீ படங்கள் மாஸ் ஆக இருந்தாலும், அந்த படங்கள் காப்பி சர்ச்சையில் சிக்காமல் இருந்ததே இல்லை. அதன்படி அவர் இதுவரை தமிழில் இயக்கிய ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய நான்கு திரைப்படங்களும் காப்பி சர்ச்சையில் சிக்கி இருக்கின்றன. அந்த வகையில் தற்போது பாலிவுட்டில் அவர் இயக்கியிருக்கும் ஜவான் திரைப்படத்தின் Prevue பார்த்த ரசிகர்கள் இப்படத்தின் காட்சிகள் சில பல்வேறு படங்களில் இருந்து காப்பி அடிக்கப்பட்டு உள்ளதாக ஒப்பிட்டு வருகின்றனர்.
அதன்படி ஜவான் படத்தில் ஷாருக்கான் முகத்தில் பாதி பக்கத்தை முகமூடி அணிந்து மறைத்தபடி இருக்கும் தோற்றம் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த அந்நியன் பட தோற்றத்தை போல் உள்ளதாக விமர்சித்து வருகின்றனர். அடுத்ததாக இதில் குழந்தையை கையில் ஏந்தியபடி வரும் காட்சி, பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி தேவி நடித்த காட்சியை ஒத்து இருப்பதாக ஒப்பிட்டு மீம் போட்டு அட்லீயை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... ஸ்டைலா... மாஸா... கெத்தா ரிலீஸ் ஆனது ஷாருக்கானின் ஜவான் Prevue
இந்திய படங்கள் மட்டுமின்றி ஹாலிவுட் படத்திலும் அட்லீ கைவைத்துள்ளதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அதன்படி டார்க் நைட் படத்தில் வரும் கெட்-அப்பை போன்ற உடல் முழுவதும் துணியை சுற்றிக்கொண்டு ஜவான் படத்தில் ஷாருக்கானும் போஸ் கொடுத்துள்ளதை நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ளனர். எங்க அம்மாவுக்கு பண்ணிய சத்தியம் தான் நான் என்கிற டயலாக்கும் Prevue-வில் இடம்பெற்று உள்ளதால், ஒருவேளை ஷாருக்கானை வைத்து அட்லீ கே.ஜி.எப் படத்தை எடுத்துள்ளாரா என்கிற சந்தேகத்தையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.