பாலியல் வழக்கில் சிக்கியவருக்கு தாங்கள் எடுக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் வாய்ப்பளித்துள்ள விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடிக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
நடிகை நயன்தாராவும் அவரது கணவர் விக்னேஷ் சிவனும் இணைந்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்கிற திரைப்படத்தை எடுத்து வருகிறார்கள். ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் செவன் ஸ்கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ளார். இதில் ஹீரோயினாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, மிஷ்கின், கெளரி கிஷான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் பின்னணி பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், இப்படம் பெரும் சர்ச்சையில் சிக்கி உள்ளது. இப்படத்தில் பாலியல் வழக்கில் சிக்கிய ஒருவருக்கு வாய்ப்பளித்துள்ளதே அந்த சர்ச்சைக்கு காரணம். இதனால் விக்னேஷ் சிவனையும், படத்தின் தயாரிப்பாளரான நயன்தாராவையும் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.
24
ஜானி மாஸ்டரால் வெடித்த சர்ச்சை
அந்த பிரபலம் வேறுயாருமில்லை ஜானி மாஸ்டர் தான். பாலியல் வழக்கில் சிக்கிய நடன இயக்குநர் ஜானி மாஸ்டரை விக்னேஷ் சிவன், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தில் பணியாற்ற வைத்துள்ளதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தப் படத்தை நயன்தாரா தயாரிப்பதால் அவர் மீதும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 2024ம் ஆண்டு செப்டம்பரில், பெண் நடனக் கலைஞர் ஒருவர் அளித்த பாலியல் புகார் அடிப்படையில் ஜானி மாஸ்டர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
34
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்துக்கு கிளம்பிய எதிர்ப்பு
விக்னேஷ் சிவன் இயக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தில் ஜானி மாஸ்டர் நடன இயக்குநராக பணிபுரிந்தபோது எடுத்த புகைப்படத்தை, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த விக்னேஷ் சிவன் ஸ்வீட் மாஸ்டர் என குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து, விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா மீது விமர்சனங்கள் குவிந்தன. "விக்னேஷ் சிவன் மீதான மரியாதை குறைந்து வருவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. முதலில் அது திலீப், இப்போது ஜானி மாஸ்டர். குற்றம் சாட்டப்பட்டவர்களை ஆதரிப்பதை நிறுத்துங்கள்" என்று நெட்டிசன் ஒருவர் பதிவிட்டு இருந்தார்.
பாடகி சின்மயி போட்டுள்ள பதிவில் "பாலியல் குற்றவாளிகளை நாம் ஆதரிப்பது போல் தெரிகிறது. அவர்களை அதிகாரப் பதவிகளில் வைத்திருக்கிறோம்" என்று விமர்சித்தார். நயன்தாரா இந்தப் படத்தின் தயாரிப்பாளராக இருப்பதால், அவர் மீதும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. "நயன்தாரா சினிமாவில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றி பேசியுள்ளார். ஆனால், பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஒருவருடன் பணிபுரிவதை ஏன் அவர் அனுமதிக்கிறார்?" என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார். 2024ம் ஆண்டு செப்டம்பரில், ஜானி மாஸ்டர் மீது பாலியல் புகார் எழுந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அதோடு 'திருச்சிற்றம்பலம்' படத்திற்காக அவருக்கு வழங்கப்பட்ட தேசிய விருதும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.