
கற்றது தமிழ், தரமணி, தங்கமீன்கள், பேரன்பு போன்ற படங்களை இயக்கியவர் ராம். இவர் இயக்கத்தில் தற்போது திரைக்கு வந்துள்ள திரைப்படம் பறந்து போ. தங்க மீன்கள் படத்தை அப்பா - மகள் பாசத்தை மையமாக வைத்து இயக்கி இருந்த ராம், பறந்து போ திரைப்படத்தை அப்பா - மகனின் பாசத்தை மையமாக வைத்து எடுத்துள்ளார். நகைச்சுவை நிறைந்த படமாகவே இது வந்துள்ளது என்பது அதன் நாயகன் தேர்வில் இருந்தே தெரியவந்தது. இப்படத்தில் அகில உலக சூப்பர்ஸ்டார் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்துள்ளார்.
மேலும் கிரேஸ் ஆண்டனி, சிறுவன் மிதுல் ராயன், நடிகை அஞ்சலி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. இப்படத்தின் பாடல்களுக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். அதேபோல் பின்னணி இசையை யுவன் சங்கர் ராஜா அமைந்துள்ளார். இப்படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பாளராக மதி பணியாற்றி உள்ள இப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. படம் பார்த்த நெட்டிசன்கள் தங்கள் விமர்சனங்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை பார்க்கலாம்.
படம் பார்த்த நெட்டிசன் பதிவிட்டுள்ளதாவது : “ராம் இயக்கிய பறந்து போ. தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அழகான கவிதை. நீங்கள் அதை வாசிக்க வேண்டும். அதன் நடையை, அழகியலை, கருவை ரசிக்க வேண்டும். பொதுவாக ராம் படங்களில் ஒருவித கோபம், சோகம், விரக்தி இருக்கும். கற்றது தமிழ், தங்கமீன் கள், தரமணி, பேரன்பு படங்களை அழுது கொண்டே பார்த்து இருப்போம். பறந்து போ முற்றிலும் வேறு அனுபவம். அவ்வளவு சிரிப்பு, சிவா, கிரேஸ் ஆண்டனி, சிறுவன் மிதுல்ராயன், அஞ்சலி, அஜூவர்கீஸ் சிரிக்க வைக்கிறார்கள். சிரித்து கொண்டே, கை தட்டி ஏகப்பட்ட சீன் களை அனுபவிக்கலாம்
குடும்பம், குழந்தைகள், பரபரப்பான வாழ்க்கை, ஓட்டம் என பல விஷயங்களையும் பேசுகிறது. ஏகாம்பரம் ஒளிப்பதிவு, மதன் கார்க்கி வரிகள், சந்தோஷ் தயாநிதி இசை படத்துக்கு பலம். பக்கா கலகல, காமெடி கலந்த கமர்சியல் கதை. குடும்பம், குழந்தைகளுடன் பார்த்தால் அந்த நாள் மறக்க முடியாத நாளாக இருக்கும். வாழ்நாள் முழுக்க படம், சீன்கள் குறித்த நினைவு இருக்கும். முந்தைய படங்களில் அழ வைத்த இயக்குனர் ராம், இதில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார். சிவா ,கிரேஸ் ஆண்டனி, சிறுவன் மிதுல்ராயன், அஞ்சலி, அஜுவர்கீஸ் போட்டி போட்டி நடித்து ரசிக்க வைக்கிறார்கள். 2025ல் ஹிட் படமும் கூட” என பாராட்டி பதிவிட்டுள்ளார்.
மற்றொருவர் போட்டுள்ள பதிவில், குழந்தைகளின் உலகத்தில் பெற்றோர்களை travel செய்ய வைத்துள்ளார். அடைபட்டுக் கிடக்கும் 90s kids மனதை Gen Z kids மூலம் பறக்க பயிற்றுவித்துள்ளார் ராம். சமூக நெருக்கடிகளில் உழலும் மனித மனங்கள், அதிலிருந்து விடுபட போராடி 'வாழ்வின் ருசியை' ரசித்து இன்புறுவதை "பறந்து போ" காட்சிப்படுத்தி உள்ளது. சிறுவன் & சிறுவர்கள் நடிப்பு அட்டகாசம். அப்பா கேரக்டரில் 'மிர்ச்சி' சிவா பக்காவாக உள்ளார். கேரக்டர் சாய்ஸ் & நடிகர்களின் நடிப்பு குறிப்பிடத் தகுந்தது. இயக்குனர் பின்னணியில் பேச வேண்டியதை இப்படத்தில் பாடலாக வைத்தது சூப்பர். சமகாலத்தில் பேச வேண்டிய கருப்பொருளை திரையில் கொண்டு வந்ததற்கு இயக்குனர் ராம் அவர்களுக்கு நன்றி. பாராட்டுக்கள் என குறிப்பிட்டுள்ளார்.
படம் பார்த்த நெட்டிசன் போட்டுள்ள பதிவில், வாழ்வில் வெற்றிபெறுவது என்பது என்ன? நம் தலைமுறை பெற முடியாததை நமது அடுத்த தலைமுறைக்கு எப்பாடுபட்டவாது கொண்டுசேர்த்துவிட வேண்டும் என்பதே. அப்படியாக, முதல் தலைமுறை பட்டதாரியான அப்பாக்கள், தாங்கள் பெற முடியாத உயர்தர கல்வி, விளையாட்டுப் பொருட்கள், உணவு, போட்டி சூழல் என இதனை தான் 'பறந்து போ' என்ற திரைப்படமாக அளித்துள்ளார் இயக்குநர் ராம்.
சிறுவர்களின் சிறை வாழ்வை உடைத்து சுதந்திர வாழ்வை அளிக்க வேண்டியதை எளிமையாக நகைச்சுவையாக திரைப்படைத்தின் மூலம் கூறுகிறார் ராம். ஏகாதிபத்தியம் திணிக்கும் அழுத்தம் மிகுந்த வாழ்வு முறையிலிருந்து விடுபட்டு சுயசார்பான சுதந்திர வாழ்வியலை தேர்ந்தெடுக்க வேண்டியதன் அவசியத்தை 'பறந்து போ' உணர்த்துகிறது. பெற்றோர்களையும் சிறுவர்களையும் கதாப்பாத்திரங்களோடு ஒன்ற வைத்துவிடுகிறது. ராமிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட திரைப்படம். அனைவரும் குடும்பத்தோடு ஜாலியாக தியேட்டர் சென்று பார்க்கவேண்டிய படம் என பாராட்டி உள்ளார்.