
கோலிவுட்டில் தற்போது டிரெண்டிங் பாடகியாக வலம் வருபவர் சுப்லாஷினி. இவருடைய தந்தை ஒரு வங்கி ஊழியர். அம்மா ஹோம் மேக்கர். இவர் ஒரு மிடில் கிளாஸ் பேமிலியை சேர்ந்தவர் தான். சிறுவயதில் இருந்தே பாடல் மீது சுப்லாஷினிக்கு ஆர்வம் இருந்துள்ளது. இதனால் ஸ்கூல் படிக்கும்போதே பள்ளியில் நடைபெறும் பாட்டு போட்டியில் பங்கேற்று இருக்கிறார். பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்கு வரும்போது மியூசிக் பேண்ட் உள்ள கல்லூரியில் தான் படிக்க வேண்டும் என முடிவெடுத்து பல கல்லூரிகளை ரிஜெக்ட் செய்து இறுதியாக எதிராஜ் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார். இவர் அங்கு பிஏ இங்கிலீஷ் படித்துள்ளார்.
கல்லூரியில் தன்னுடைய மியூசிக் பேண்ட் மூலம் பல கல்லூரிகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று பேமஸ் ஆன சுப்லாஷினி, 2017-ம் ஆண்டில் இருந்தே, இன்ஸ்டாவில் தன்னுடைய பாடல் வீடியோக்களை பதிவிட்டு வந்திருக்கிறார். இவருக்கு பாடல் எழுதுவதிலும் ஆர்வம் இருந்துள்ளது. 2020-ம் ஆண்டு லாக்டவுன் போடப்பட்ட போது தான் எழுதிய வரிகளைக் கொண்டு பாடல்கள் உருவாக்கி அதை இன்ஸ்டாகிராமில் பதிவிடுகிறார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இதையடுத்து ஆனந்த் ஸ்வாமிநாதன் என்பவர் இவரின் பாடல்களை பார்த்து இம்பிரஸ் ஆகி அவருடன் சேர்ந்து இசை ஆல்பம் உருவாக்க முடிவெடுக்கிறார். அப்படி உருவான பாடல் தான் காத்தாடி என்கிற சுயாதீன பாடல்.
2021-ம் ஆண்டு காத்தாடி பாடல் ரிலீஸ் ஆனபோது அது பெரியளவில் ரீச் ஆகவில்லை. அதன்பின்னர் தொடர்ந்து ஆல்பம் பாடல்களை பாடி வந்த சுப்லாஷினி, தன்னுடைய கல்லூரி படிப்பையும் முடித்துவிட்டு ஹெச்.ஆர் ஆக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் தான் 2023-ம் ஆண்டு இவரின் காத்தாடி பாடல் திடீரென டிரெண்டாக தொடங்கியது. அப்போது தான் யார்ரா இந்த பொண்ணு என வலைவீசி தேட ஆரம்பித்தார்கள் சினிமா இசையமைப்பாளர்கள். அப்படி காத்தாடி பாடல் டிரெண்டான பின்னர் அவருக்கு சினிமா வாய்ப்பு தேடி வருகிறது. அதுவும் தனுஷ் இயக்கிய நீக் படத்தில் இடம்பெற்ற கோல்டன் ஸ்பேரோ பாடல். இப்பாடல் யூடியூபில் 100 மில்லியனுக்கும் மேல் பார்வைகளை பெற்று வைரல் ஹிட் ஆனது.
கோல்டன் ஸ்பேரோ பாடல் ஹிட்டானதை தொடர்ந்து அடுத்ததாக புஷ்பா 2 படத்தில் இடம்பெற்ற கிஸ்க் கிஸ்கா பாடலை பாடும் வாய்ப்பை பெற்றார் சுப்லாஷினி. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த இப்பாடலும் பான் இந்தியா அளவில் வைரல் ஹிட் ஆனது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளிலும் கிஸ்க் பாடலை பாடியது சுப்லாஷினி தான். அவருக்கு அந்த மொழிகள் எல்லாம் தெரியாவிட்டாலும் அதை செம சூப்பராக பாடி அசத்தி இருப்பார். இதையடுத்து கிங்ஸ்டன் படத்தில் இடம்பெற்ற ராசா ராசா என்கிற பாடலை பாடி அசத்தி இருந்தார் சுப்லாஷினி.
இதையடுத்து அவர் குரலில் வெளியான பொட்டல முட்டாய் என்கிற பாடலும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வரும் தலைவன் தலைவி திரைப்படத்தில் தான் இந்த பாடல் இடம்பெற்று உள்ளது. இப்பாடலை சந்தோஷ் நாராயணன் உடன் இணைந்து பாடி இருந்தார் சுப்லாஷினி. அதில் இவரது வாய்ஸ் கேட்க கேட்க கேட்டுக் கொண்டே இருக்கும்படி இருக்கும். இப்பாடலை படத்திலும் அருமையாக கோரியோகிராப் செய்திருப்பார்கள்.
இறுதியாக லேட்டஸ்ட் சென்சேஷனாக இருக்கும் மோனிகா பாடலையும் சுப்லாஷினி தான் பாடி இருந்தார். தமிழ் சினிமாவில் முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவராக அனிருத்திடம் இருந்து இப்பாடல் பாட அழைப்பு வந்தபோது, அது யாரோ பிராங் செய்கிறார்கள் என நினைத்திருக்கிறார் சுப்லாஷினி. பின்னர் விசாரித்த போது தான் அது உண்மையிலேயே அனிருத்திடம் இருந்து வந்த அழைப்பு என தெரிந்ததும், மோனிகா பாடலை பாட சென்றிருக்கிறார். அப்பாடலும் வைரல் ஹிட். இப்படி இவர் பாடிய அனைத்து பாடல்களும் தொடர்ந்து ஹிட்டாவதால் தமிழ் சினிமாவில் செம டிமாண்ட் உள்ள பாடகியாக வலம் வருகிறார் சுப்லாஷினி.