கொச்சியில் ஒரு ஐடி ஊழியரை கடத்தி தாக்கியதாக நடிகை லட்சுமி மேனன் மீது புகார் எழுந்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கொச்சியில் ஐடி ஊழியரை கடத்தி தாக்கியதாக புகார் எழுந்துள்ள நிலையில், நடிகை லட்சுமி மேனனிடம் இது தொடர்பாக விசாரணை நடத்த எர்ணாகுளம் வடக்கு காவல் நிலைய போலீசார் திட்டமிட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 24) இரவு பானர்ஜி சாலையில் உள்ள ஒரு பாரில் தொடங்கிய இந்த மோதலில், ஐடி ஊழியரை காரில் கடத்தி, தாக்கி, லட்சுமி மேனன் மற்றும் அவரது நண்பர்கள் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் இதுவரை இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் தொடர்புடைய நடிகை லட்சுமி மேனனை வலைவீசி தேடி வருகிறார்கள்
24
கிட்நாப் பண்ணி தாக்குதல்
ஆலுவா நகரைச் சேர்ந்த அலியார் ஷா சலீம் என்பவர் தான் புகார் அளித்திருக்கிறார். அதன்படி கொச்சியில் உள்ள ஒரு பாரில் இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாம். லட்சுமி மேனன், மிதுன், அனீஷ் மற்றும் மற்றொரு பெண் நண்பர் ஒரு குழுவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் இந்த மோதல் வீதி வரை சென்றிருக்கிறது, அலியார் மற்றும் அவரது நண்பர்களும் பாரில் இருந்து வெளியேற முயன்றபோது, லட்சுமி மேனனும் அவரது நண்பர்களும் அலியாரின் வாகனத்தைப் பின்தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது. இரவு 11:45 மணியளவில், வடக்கு ரயில்வே மேம்பாலம் அருகே, அலியாரின் கார் நிறுத்தப்பட்டு, அவர் வலுக்கட்டாயமாக வெளியே இழுக்கப்பட்டிருக்கிறார்.
34
இருவர் கைது
எஃப்ஐஆர் படி, அலியாரை லட்சுமி மேனனும் அவரது நண்பர்களும் தங்கள் வாகனத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு அவர் முகம் மற்றும் உடலில் தாக்கியதோடு, கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டி இருக்கிறார்கள். பின்னர் அவரை ஆலுவா-பரவூர் சந்திப்பில் விட்டுவிட்டு லட்சுமி மேனன் தன்னுடைய நண்பர்களுடன் எஸ்கேப் ஆகி இருக்கிறார். இதுகுறித்து அலியார் அளித்த வாக்குமூலத்தின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
முதற்கட்டமாக ஆலுவா மற்றும் பரவூரைச் சேர்ந்த மிதுன் மற்றும் அனீஷ் கைது செய்துள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தைக் கண்டுபிடிக்க சிசிடிவி காட்சிகள் போலீசாருக்கு உதவியதாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் போலீஸ் காவலில் உள்ளனர், லட்சுமி மேனனிடம் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால், அவர் தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகை லட்சுமி மேனன் பிரபு சாலமன் இயக்கிய கும்கி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதையடுத்து தமிழில் 'சுந்தரபாண்டியன்', 'குட்டிப்புலி', 'ஜிகர்தண்டா', 'மிருதன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர் தற்போது ஆள் அட்ரஸே தெரியாமல் போய்விட்டார். அவரது நடிப்பில் கடைசியாக சப்தம் என்கிற திரைப்படம் வெளியானது.