
ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் படம் 'கிங்ஸ்டன்'. ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தை, அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கி உள்ளார். பேச்சிலர் படத்தை தொடர்ந்து, நடிகை திவ்ய பாரதி இந்த படத்தில் ஜிவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஜிவி பிரகாஷின் 25-ஆவது திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படம் கடல் அமானுஷ்யங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள முதல் இந்திய திரைப்படம் ஆகும். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷே இசையமைத்துள்ளார். இந்த படம் மார்ச் 7-ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
அமானுஷ்யமான விஷயங்களை மையமாக வைத்து, பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் என்பவர் இயக்கியுள்ள திரைப்படம் தான் எமகாதகி. இந்த படத்தை சரங் பிரதார்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. பிரபல தெலுங்கு நடிகை ரூபா கொடுவாயூர் கதாநாயகியாக நடிக்க, இவருக்கு ஜோடியாக யூடியூப் பிரபலம் நரேந்திர பிரசாத் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தை மார்ச் 7-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
இயக்குனர் அரவிந்த் ராஜகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அஸ்திரம். இதில் நடிகர் ஷியாம் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஹீரோவாக நடித்துள்ளார். கிரைம் மற்றும் சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தில், ஷியாம் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல வருடங்களாக ஒரு வெற்றி படத்தை கொடுக்க போராடி வரும் ஷியாம் இந்த படத்தின் மூலம் கம் பேக் கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இயக்குனர் ஜிபி பிரிட்டோ இயக்கத்தில் 5 பேரின் வாழ்க்கை ஒரு முனையில் எப்படி முடிகிறது என்பதை மிகவும் தத்ரூபமாக கூறியுள்ள திரைப்படம் நிறம் மாறும் உலகில். காதல, எமோஷன், கண்ணீர் ஏன் எதார்த்தமான கதைக்களத்தில் இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் நட்ராஜ், ரியோ ராஜ், யோகி பாபு, சாண்டி மாஸ்டர், பாரதி ராஜா, வடிவுக்கரசி, காவ்யா அறிவுமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம், மார்ச் 7-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
காமெடி நடிகர் ஸ்ரீநாத் காமெடி கதைக்களத்தில் இயக்கி நடித்துள்ள திரைப்படம் தான் லெக் பீஸ். இந்த படத்தை ஹீரோ சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில், விடிவி கணேஷ், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காமெடி சரவெடியாக உருவாகியுள்ள இந்த படம், இந்த வாரம் மார்ச் 7-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
நடிகர் விமல் நடிப்பில், 6 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டு, கிடப்பில் போடப்பட்ட 'படவா' திரைப்படம் இந்த வாரம் ரிலீஸ் ஆகியுள்ளது. விமல் - சூரியின் கலகலப்பான காம்போவில் உருவாகியுள்ள இந்த படத்தின் இவர்கள் இருவரின் காமெடி அதிகம் பேசப்படும் என கூறப்படுகிறது. இந்த படத்தை கே.வி.நந்தா என்பவர் இயக்கி உள்ள நிலையில், ஜான் பீட்டர் இசையமைத்துள்ளார். காதலர் தினத்தை முன்னிட்டு இந்த படம் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் ரிலீஸில் இருந்து பின்வாங்கியது. தற்போது மார்ச் 7-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
தமிழ் திரையுலகில் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக உருவாகியுள்ளது மர்மர் திரைப்படம். இந்தப் படத்தை ஹேம்நாத் நாராயணன் எழுதி, இயக்கியுள்ளார். எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. இசை மற்றும் பாடல்கள் இல்லாமல் உருவாகியுள்ள இந்த படம் அமானுஷ்யத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது. குறைந்த பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தை மார்ச் 7-ல் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
மலையாள நடிகையான லிஜோமோல் தொடர்ந்து தமிழில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது இவர் ஹரிகிருஷ்ணன் ஜோடியாக நடித்துள்ள ஜென்டில்வுமன் திரைப்படம் இந்த வாரம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஜோசுவா சேதுராமன் இயக்க, கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோபோ ஷங்கர் கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் தான் அம்பி. காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை, Bosser J Elvin என்பவர் இயக்கி உள்ளார். ரமேஷ் கண்ணா, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தில், ரோபோ ஷங்கர் ரொமான்டிக் ஹீரோவாகவும் கலக்கி உள்ளார். இந்த படம், மார்ச் 7-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.