சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ள ரிவால்வர் ரீட்டா திரைப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆன நிலையில், அதன் முதல் நாள் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.
கீர்த்தி சுரேஷுக்கு வெற்றிப் படங்கள் வெளியாகி நீண்ட நாட்களாகிறது. கடைசியாக 'தசரா' படத்தின் மூலம் வெற்றி பெற்றார். அதன்பிறகு, அவருக்கு எந்த படமும் ஹிட்டாகவில்லை. தற்போது, அவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், வெற்றி மட்டும் கைக்கு எட்டவில்லை. இந்நிலையில், 'ரிவால்வர் ரீட்டா' என்ற படத்தின் மூலம் களமிறங்கி உள்ளார் கீர்த்தி. ஜே.கே.சந்துரு இயக்கிய இந்தப் படம், பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் பேனர்களின் கீழ் சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோரால் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.
24
ரிவால்வர் ரீட்டா படத்தின் கதை
ரீட்டா (கீர்த்தி சுரேஷ்) ஒரு பேக்கரியில் வேலை செய்கிறாள். தந்தை சிறு வயதிலேயே இறந்துவிட, தாய் செல்லம்மா (ராதிகா சரத்குமார்) மூன்று பெண் பிள்ளைகளையும் வளர்த்து வருகிறார். ஒருநாள், பாண்டிச்சேரியின் பெரிய ரவுடியான டிராகுலா பாண்டியன், போதையில் ரீட்டாவின் வீட்டிற்குள் நுழைந்து துப்பாக்கியைக் காட்டி மிரட்டுகிறான். தற்காப்புக்காக ரீட்டாவும் அவளது தாயும் அவனைத் தாக்க, அவன் இறந்துவிடுகிறான். செய்வதறியாது திகைக்கும் அவர்கள், உடலை ஃபிரிட்ஜில் மறைத்து வைத்துவிட்டு, காலையில் புதைக்கத் திட்டமிடுகின்றனர். இதற்கிடையில், போலீஸ், டிராகுலா பாண்டியனின் மகன் பாபி (சுனில்) மற்றும் ஒரு மாஸ்டர் கேங் என பலரும் அந்த உடலைத் தேடுகின்றனர். இந்த சிக்கலில் இருந்து ரீட்டாவின் குடும்பம் எப்படித் தப்பியது? என்பதே படத்தின் கதை.
34
சொதப்பிய ரிவால்வர் ரீட்டா
ஒரு பிணத்தை மையமாக வைத்து, அதைச் சுற்றி நடக்கும் குழப்பங்கள், பயம் மற்றும் பதற்றத்தில் இருந்து நகைச்சுவையை உருவாக்குவது வழக்கம். நகைச்சுவை நன்றாக அமைந்தால் படம் வெற்றி பெறும், இல்லையெனில் ஏமாற்றமே மிஞ்சும். 'ரிவால்வர் ரீட்டா' விஷயத்திலும் இதுதான் நடந்துள்ளது. பிணத்தை மறைக்க ரீட்டாவின் குடும்பம் படும் பாடுகள், அந்தப் பிணத்தைத் தேடும் ரவுடி கும்பல்கள் என நான்கு கதைகளை இணைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், நகைச்சுவை கைகொடுக்காததால் படம் மிகவும் மெதுவாக நகர்கிறது. சுவாரஸ்யமான திருப்பங்கள் எதுவும் இல்லை. அடுத்தடுத்து வரும் கும்பல்களும், ஒரே மாதிரியான வசனங்களும் ரசிகர்களின் பொறுமையைச் சோதிக்கின்றன.
விமர்சன ரீதியாக சொதப்பிய இப்படம் வசூலிலும் செம அடிவாங்கி இருக்கிறது. இப்படம் ரிலீஸ் ஆன முதல் நாள் தமிழ்நாட்டில் வெறும் ரூ.53 லட்சம் மட்டுமே வசூலித்து இருக்கிறது. இந்தியளவில் ஒட்டுமொத்தமாக இப்படம் ரூ.65 லட்சம் வசூலித்துள்ளதாம். கோடிகளில் வசூலிக்கும் படங்களே தோல்வியை தழுவி வருவதால், இப்படம் லட்சங்களில் தடுமாறுவதால், கன்பார்ம் பிளாப் தான் என திரையுலக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த பேபி ஜான், ரகு தாத்தா மற்றும் சைரன் ஆகிய படங்கள் தோல்வி அடைந்தன. இந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான ஒரே படம் ரிவால்வர் ரீட்டா தான். அதுவும் தோல்வியை நோக்கி நகர்வதால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.