அறிமுகப்படுத்திய பாலா
பாலா இயக்கத்தில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான நந்தா படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் கருணாஸ். இப்படத்தின் இவர் நடித்த லொடுக்கு பாண்டி கதாபாத்திரம் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இதையடுத்து ஏராளமான படங்களில் காமெடி வேடங்களில் நடித்து அசத்திய கருணாஸ், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக வலம் வந்தார். இதுதவிர அரசியலிலும் ஈடுபட்டு வந்தார்.
உதவி இயக்குனர் அவதாரம்
இந்நிலையில், நடிகர் கருணாஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்ற உள்ளதாக அறிவித்துள்ளார் கருணாஸ். இப்படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடிக்கிறார். கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது.
முழு நேரமும் சினிமாவில் பயணிக்க முடிவு
இதுகுறித்து நடிகர் கருணாஸ் கூறியதாவது : “கிராமிய கானா பாடகராக என் கலை வாழ்வைத் தொடங்கியிருந்தாலும், இவ்வளவு பெரிய அடையாளத்தையும் அறிமுகத்தையும் கொடுத்தது சினிமா தான். தாய்மடியான தமிழ் சினிமாவில் முழு நேரமும் பயணிக்க முடிவெடுத்து இருக்கிறேன். ஆற்றல்மிகு வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்ற இருக்கிறேன்.
வெற்றிமாறனுடன் கூட்டணி
கடைசி வரை கற்றுக் கொள்வதுதான் சினிமாவின் சிறப்பு. இணைத்துக்கொண்ட வெற்றிக்கு, என் நன்றி. தற்போது பல்வேறு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும், தமிழர் வீரத்தை பறை சாற்றும் இத்திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றுவதில் பெருமை கொள்கிறேன். ராமனுக்கு அணிலாக இருப்பதை போல், இந்த வெற்றி அணியில் வெற்றி மாறனுக்கு நானும் ஓர் அணிலாக இருக்க விரும்பினேன்.