Song : கண்ணதாசன் எழுதிய டபுள் மீனிங் பாட்டு... கேட்கும்போது காதல் தெரியும்; வரிகளை ஆராய்ந்தால் தாம்பத்தியம் புரியும்

Published : Oct 23, 2026, 07:30 PM IST

Kannadasan Song Secret : கவியரசர் கண்ணதாசன், சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த இருவர் உள்ளம், படத்திற்காக எழுதிய டபுள் மீனிங் பாடலைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

PREV
16
Kannadasan Song Secret

தமிழ் சினிமாவில் காதல், பாசம், பிரிவு, தத்துவம் என மனித வாழ்க்கையின் அத்தனை உணர்வுகளையும் தனது பாடல் வரிகளில் அழகாகப் பதிவு செய்தவர் கவியரசர் கண்ணதாசன். எளிமையான வார்த்தைகளைக் கொண்டே ஆழமான கருத்துகளைச் சொல்வதில் அவருக்கு நிகர் அவரே. சில நேரங்களில் அவர் எழுதிய பாடல்களை மேலோட்டமாகக் கேட்கும்போது ஒரு பொருளும், அதன் வரிகளை ஆழமாக ஆராயும்போது மற்றொரு பொருளும் கிடைக்கும்.

அப்படிப்பட்ட வித்தியாசமான முயற்சிகளில் ஒன்றுதான் சிவாஜி கணேசன் நடித்த 'இருவர் உள்ளம்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது' பாடல். ஒவ்வொரு வரியிலும் இரண்டே வார்த்தைகளைப் பயன்படுத்தி காதலின் பல்வேறு பரிமாணங்களை கண்ணதாசன் வெளிப்படுத்தியிருப்பதுதான் இந்தப் பாடலின் தனிச்சிறப்பு.

26
சிவாஜியின் வித்தியாசமான நடிப்பில் உருவான இருவர் உள்ளம்!

1963ஆம் ஆண்டு வெளியான 'இருவர் உள்ளம்' திரைப்படத்தை எல்.வி. பிரசாத் இயக்கியிருந்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சரோஜா தேவி, எம்.ஆர். ராதா, ரங்காராவ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு கே.வி. மகாதேவன் இசையமைத்திருந்தார். கலைஞர் மு.கருணாநிதி வசனங்களை எழுதியிருந்தார். படத்தின் அனைத்துப் பாடல்களையும் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.

அந்தக் காலகட்டத்தில் கதாநாயகர்கள் பெரும்பாலும் நல்லொழுக்கம் கொண்டவர்களாகவும், எந்தத் தவறும் செய்யாதவர்களாகவும் சித்தரிக்கப்பட்டனர். ஆனால், தனது திரை பிம்பத்தைப் பற்றிக் கவலைப்படாமல் மாறுபட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதில் சிவாஜி கணேசன் தனித்துவம் பெற்றிருந்தார். அந்த வகையில், 'இருவர் உள்ளம்' திரைப்படத்தில் ஆரம்பத்தில் பெண்களுடன் பொழுதுபோக்குவதையே வாழ்க்கையாகக் கருதும் இளைஞராக நடித்திருப்பார். பின்னர் சரோஜா தேவியைச் சந்தித்ததும் அவரது வாழ்க்கையில் உண்மையான காதல் மலர்கிறது.

ஆனால், அவரது கடந்த கால நடவடிக்கைகளை அறிந்த நாயகி அவரை ஏற்க மறுக்கிறார். இதற்கிடையே செய்யாத குற்றம் ஒன்றில் அவர் சிக்கிக்கொள்ள, ஏற்கெனவே அவரைப் பற்றி தவறான அபிப்பிராயம் கொண்டிருக்கும் சமூகமும், குடும்பமும் அவரையே சந்தேகிக்கின்றன. இந்தச் சூழலைக் கடந்து தனது காதலையும் நேர்மையையும் அவர் எப்படி நிரூபிக்கிறார் என்பதே படத்தின் மையக்கதை.

36
இரண்டே வார்த்தைகளில் காதலைச் சொன்ன கண்ணதாசன்!

'இருவர் உள்ளம்' திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அவற்றில் தனித்துவமான பாடலாக அமைந்ததுதான் 'அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது'. இந்தப் பாடலின் மிகப்பெரிய சிறப்பே அதன் வார்த்தை அமைப்புதான். ஒவ்வொரு வரியையும் இரண்டே சொற்களைக் கொண்டு உருவாக்கியிருப்பார் கண்ணதாசன்.

காதலர்களுக்கு இடையே ஏற்படும் ஈர்ப்பு, ஒருவரையொருவர் நெருங்க நினைக்கும் ஆசை, அதற்குத் தடையாக வரும் வெட்கம், பின்னர் கனியும் காதல் என ஒவ்வொரு உணர்வையும் மிகக் குறைந்த வார்த்தைகளில் வெளிப்படுத்தியிருப்பார். முதன்முறையாக இந்தப் பாடலைக் கேட்பவர்களுக்கு இது ஓர் அழகான காதல் பாடலாகவே தோன்றும். ஆனால், பாடலில் இடம்பெறும் சில உவமைகளைக் கூர்ந்து கவனித்தால், காதலைத் தாண்டி தாம்பத்திய வாழ்க்கையின் நெருக்கத்தையும் கண்ணதாசன் மறைமுகமாக உணர்த்தியிருப்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

46
வண்டும் மலரும் சொல்லும் மறைமுக அர்த்தம்!

கண்ணதாசன் தனது பாடல்களில் இயற்கையை மனித உணர்வுகளுடன் ஒப்பிட்டுப் பாடுவதில் வல்லவர். இந்தப் பாடலிலும் வண்டு, மலர், மழை, பூமி போன்ற இயற்கை சார்ந்த உருவகங்களைப் பயன்படுத்தியிருப்பார். ஒரு வண்டு மலரைத் தேடி வந்து, அதில் அமர்ந்து, தேனைச் சுவைத்து, பின்னர் அங்கேயே உறங்குவதாக அமைக்கப்பட்டிருக்கும் வரிகள் மேலோட்டமாகப் பார்த்தால் இயற்கையின் அழகை விவரிப்பதாகத் தோன்றும். ஆனால், அவற்றை காதலர்களின் நெருக்கத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது முற்றிலும் மாறுபட்ட பொருள் கிடைக்கிறது.

காதலின் அடுத்தகட்டமான உடல் சார்ந்த ஈர்ப்பையும் தாம்பத்திய உறவையும் நேரடியாகச் சொல்லாமல் உருவகங்கள் வழியாக உணர்த்தியிருக்கிறார் கவியரசர். அதேபோன்று மழை பொழிவதும், பூமி நனைவதும், மேனி குளிர்வதும் என இயற்கையின் நிகழ்வுகளை ஒன்றன்பின் ஒன்றாக இணைத்து, காதலின் உணர்வுகளை நுட்பமாக வெளிப்படுத்தியிருப்பார். இத்தகைய வரிகளை எந்தக் கோணத்தில் அணுகுகிறோம் என்பதைப் பொறுத்து அவற்றின் பொருளும் மாறுபடுகிறது. இதுதான் கண்ணதாசனின் கவிதை மொழியில் இருக்கும் அழகு.

56
பாடலுக்குள் ஒளிந்திருக்கும் இன்னொரு கதை!

இந்தப் பாடலின் மற்றொரு சுவாரஸ்யமான அம்சம், அதன் வரிகளை ஒரு குறிப்பிட்ட வரிசையில் கவனிக்கும்போது கிடைக்கும் மறைமுகக் கதைதான். காதலர்களுக்கு இடையே உருவாகும் ஈர்ப்பில் தொடங்கி, நெருக்கம், வெட்கம், ஆசை எனப் பயணிக்கும் பாடல், பின்னர் இரவு முடிந்து பொழுது விடிவதையும் இளமை மீண்டும் புத்துணர்ச்சி பெறுவதையும் உணர்த்துகிறது. அதைத் தொடர்ந்து குளித்துவிட்டு வருவது, கூந்தலை முடிப்பது, அருகில் அமர்ந்து அன்புடன் அழைப்பது போன்ற காட்சிகளை நினைவூட்டும் வரிகள் இடம்பெறுகின்றன.

இவற்றை ஒன்றாக இணைத்துப் பார்த்தால், புதிதாகத் திருமணமான தம்பதியினரின் முதலிரவு தொடங்கி மறுநாள் காலை வரையிலான இனிமையான தருணங்களை கண்ணதாசன் கவிதையாக வடித்திருப்பதாகவும் பொருள் கொள்ள முடிகிறது. எங்குமே வெளிப்படையான வார்த்தைகளைப் பயன்படுத்தாமல், காதலையும் காமத்தையும் கண்ணியமான உவமைகள் மூலம் சொல்லியிருப்பதே இந்தப் பாடலை மற்ற காதல் பாடல்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.

கண்ணதாசனின் வரிகளுக்கு இணையாக இந்தப் பாடலை ரசிக்க வைப்பதில் இசையமைப்பாளர் கே.வி. மகாதேவனின் பங்களிப்பும் முக்கியமானது. காதலின் மென்மையையும் பாடலின் ரொமான்டிக் உணர்வையும் வெளிப்படுத்தும் வகையில் இசையை அமைத்திருப்பார். குறிப்பாக மற்ற இசைக்கருவிகளுக்கு மத்தியில் அக்கார்டியன் இசை தனித்துவமாக ஒலிப்பது பாடலுக்குக் கூடுதல் அழகு சேர்க்கிறது.

சிவாஜி கணேசன் - சரோஜா தேவி ஜோடியின் கெமிஸ்ட்ரியும் பாடலின் இனிமையை அதிகரிக்கிறது. பாடல் வரிகள், இசை, காட்சியமைப்பு என அனைத்தும் ஒன்றிணைந்ததால் காலம் கடந்தும் ரசிக்கப்படும் காதல் பாடல்களில் ஒன்றாக இது அமைந்துள்ளது.

66
கவியரசரின் மேஜிக்!

ஒரு பாடலை எழுதுவதற்கு ஏராளமான வார்த்தைகள் தேவையில்லை; சரியான வார்த்தைகளைச் சரியான இடத்தில் பயன்படுத்தினாலே போதும் என்பதற்கு 'அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது' பாடல் சிறந்த உதாரணம். காதலின் ஆரம்பகட்ட உணர்வுகளை ரசிப்பவர்களுக்கு இது ஓர் இனிமையான காதல் பாடல். அதேசமயம், திருமண வாழ்க்கையின் நெருக்கத்தையும் தாம்பத்தியத்தின் அழகையும் புரிந்துகொள்பவர்களுக்கு இதே பாடல் வேறொரு அனுபவத்தைக் கொடுக்கிறது.

இரண்டே வார்த்தைகளைக் கொண்ட வரிகள் மூலம் ஒரு முழுமையான காதல் கதையைச் சொல்லியிருப்பதுடன், அதற்குள் மற்றொரு அர்த்தத்தையும் மறைத்து வைத்திருப்பதுதான் கண்ணதாசனின் படைப்பாற்றலுக்குச் சான்று. பாடலைக் கேட்கும்போது காதல் தெரியும்.. வரிகளை ஆராய்ந்தால் தாம்பத்தியம் புரியும்.. இதுதான் கவியரசர் கண்ணதாசனின் கவித்துவம்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories