புரியும் மொழியில் புரியாத வகையில் பேசத் தெரிந்து கொண்ட நடிகர் கமல் ஹாசன். மக்களிடம் ஓட்டு கேட்டு, கிடைக்காத போது சீட்டுக்காக வளைய தெரிந்து கொண்ட அரசியல்வாதி கமல் ஹாசன். அவரின் குலவேஷமும், மொழி வேஷமும், மதவேஷமும் அப்படித்தான்...
கமல்ஹாசன் கதை, திரைக்கதை வசனம் எழுதி, தயாரித்து நடித்த படம், விஸ்வரூபம். சிறுபான்மையினர் மீதான தன் பாசத்தை வெளிக்காட்டும் விதமாக, விஸ்வரூபம் என்ற வார்த்தையை, உருது எழுத்து வடிவில் வெளியிட்ட மொழி பற்றாளர் கமல்ஹாசன். அதேநேரம், தங்களுக்கு எதிரான படம் என்று கூறி, படத்தை வெளியிட இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, 'இப்படம் வெளியாகவில்லை என்றால், இந்நாட்டை விட்டு வெளியேறி விடுவேன்' என்று சூளுரைத்த போதே மக்களுக்கு புரிந்துவிட்டது, இவருக்கு வாயில், 'வாஸ்து' சரியில்லை என்பது!
மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கியவர், 'ஊழலுக்கு எதிராக பயணிக்க விரும்புவோர் என்னுடன் வரலாம். இல்லையென்றால் வாசல் கதவு திறந்திருக்கு; இப்போதே சென்று விடலாம்' என்றபோது, தமிழக மக்களுக்கு அவர் இரட்டை வேடத்தில் நடித்த இந்தியன் படம் தான் நினைவுக்கு வந்தது. அப்படத்தில், லஞ்சம் வாங்குவோரை தீர்த்து கட்டும், 'இந்தியன் தாத்தா' என்ற சுதந்திர போராட்ட தியாகி வேடத்திலும், காரியம் சாதிக்க எவருடைய காலையையும் பிடிக்கத் தயங்காத குணம் கொண்ட அவர் மகன் சந்துரு என, இரு வேடங்களில் நடித்திருப்பார் கமல்ஹாசன் .