பாலிவுட்டின் இளம் நடிகை ஜான்வி கபூர், தனது தாய், மறைந்த சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவியை இழந்த சோகத்தை அடிக்கடி நினைவுகூர்ந்து, உருக்கமாகப் பேசியுள்ளார். 'அன்னையர் தினத்தன்று அவரது பழைய பேட்டி ஒன்று மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஸ்ரீதேவி மறைவுக்குப் பிறகு, தனது தங்கை குஷி கபூர் தனக்கு எவ்வாறு ஆறுதலாக இருந்தார் என்பதை அவர் நெகிழ்ச்சியுடன் விவரித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு ஸ்ரீதேவியின் மறைவு இந்தியாவுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் தனக்குள் ஏற்பட்ட வெறுமையை விவரித்த ஜான்வி, "என்ன நடக்கிறது, இனி என்ன செய்வது என்ற குழப்பத்தில் நான் இருந்தேன். ஆனால், என் தங்கை குஷி, என்னைவிட இளையவளாக இருந்தும், என்னைத் தேற்றுவதற்காகத் தானே அழாமல் இருந்தாள். அவள் என்னைவிட மிகவும் துணிச்சலாகவும், முதிர்ச்சியுடனும் நடந்துகொண்டாள்" என்று கூறினார். தங்கையின் இந்த எதிர்பாராத துணிச்சலும், ஆதரவும் அந்த நேரத்தில் தனக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது என்றும் ஜான்வி நினைவுகூர்ந்தார்.