Bhagyaraj vs Ilaiyaraaja
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் 16 வயதினிலே படம் மூலம் அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் பாக்யராஜ். இதையடுத்து தன்னுடைய சிகப்பு ரோஜாக்கள் படம் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகம் செய்த பாரதிராஜா, புதிய வார்ப்புகள் திரைப்படத்தின் மூலம் பாக்யராஜை கதாநாயகனாக ஆக்கி அழகு பார்த்தார். அதன்பின்னர் சுவரில்லாத சித்திரங்கள் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான பாக்யராஜ், அப்படத்தில் ஹீரோவாகவும் நடித்தார்.
சுவரில்லாத சித்திரங்கள் படம் பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆனதால் பாக்யராஜுக்கு கோலிவுட்டில் மவுசு அதிகரித்தது. அவரிடம் கால்ஷீட் கேட்டு தயாரிப்பாளர்கள் வரிசைகட்டி நின்றனர். அதில் ஏவிஎம் நிறுவனத்திற்கு தன்னுடைய அடுத்த பட கால்ஷீட்டை கொடுத்த பாக்யராஜ், அதன் கதையை எழுதி முடிக்கும் முன்னரே கங்கை அமரனை இசையமைப்பாளராக கமிட் செய்தார். ஆனால் ஏவிஎம் தரப்பில் முதலில் சங்கர் கணேஷ் பெயரை பரிந்துரை செய்திருக்கிறார்கள்.
bhagyaraj
ஆனால் பாக்யராஜ், நான் கங்கை அமரனுக்கு வாக்கு கொடுத்துவிட்டேன் என சொன்னதால், அவர்களும் மறுப்பு தெரிவிக்காமல் ஓகே சொல்லி இருக்கிறார்கள். இதையடுத்து, கதையை தயார் செய்து ஏவிஎம் சகோதரர்களிடம் சொல்லி இருக்கிறார் பாக்யராஜ். பொதுவாக அவர் கதை சொல்லும்போதே கதை கேட்பவர்களுக்கு அது பிடித்திருக்கிறதா இல்லையா என்பதை கண்டுபிடித்துவிடுவாராம். அப்படி பாக்யராஜ் சொன்ன கதை ஏவிஎம் சகோதரர்களுக்கு பிடித்திருந்து அவர்கள் ஓகே சொல்லாமல் ஒன்றாக கூடி பேசினார்களாம்.
இதனால் குழம்பிப் போன பாக்யராஜ், ஏவிஎம் சரவணனிடம் என்ன ஆச்சு என கேட்க, அதற்கு அவர்கள் உங்கள் கதை பிரமாதமாக உள்ளது. ஆனால் இந்த கதைக்கு இளையராஜா இசையமைத்தால் தான் சரியாக இருக்கும் என சொல்லி இருக்கிறார். ஆனால் பாக்யராஜ், கங்கை அமரனை மாற்ற முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டாராம். பாக்யராஜிடம் தங்கள் பேச்சு எடுபடாததால் கங்கை அமரனை தங்கள் அலுவலகத்துக்கு வரச் சொன்ன சரவணன், தாங்கள் பாக்யராஜ் இயக்கும் முந்தானை முடிச்சு படத்தை தயாரிக்க இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.
bharathiraja, Bhagyaraj
இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்தால் நன்றாக இருக்கும் என தோன்றுகிறது. ஆனால் பாக்யராஜ் உங்களுக்கு வாக்கு கொடுத்துவிட்டதால் இளையராஜா வேண்டாம் என சொல்கிறார் என ஏவிஎம் சரவணன் சொல்ல, கங்கை அமரனும் அவர் பேச்சை கேட்டு, பாக்யராஜிடமே நேராக சென்று தான் இப்படத்தில் இருந்து விலகிக் கொள்வதாகவும், அடுத்த படத்தில் சேர்ந்து பணியாற்றுவோம் என்றும் கூறி இருக்கிறார்.
பாக்யராஜும் வேறு வழியின்றி இளையராஜா இசையமைக்க ஓகே சொன்னாராம். இப்படி இவர்கள் பஞ்சாயத்து முடிஞ்சதும் மறுபுறம் இளையராஜா இந்த படத்துக்கு இசையமைக்க மாட்டேன் என ஏவிஎம் சகோதரர்களிடமே ஓப்பனாக சொல்லிவிட்டாராம். உடனே அவர்களும் பாக்யராஜுக்கும் இளையராஜாவுக்கும் இடையே ஏதேனும் மனஸ்தாபம் இருக்கும் என நினைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டு பாக்யராஜிடம் நடந்ததை கூறி இருக்கின்றனர்.
உடனே பாக்யராஜ், நான் பேசிக் கொள்கிறேன் என சொல்லிவிட்டு இளையராஜாவை பார்க்க கிளம்பி இருக்கிறார். அங்கு சென்றதும் என்ன என் படத்துக்கு இசையமைக்க மாட்டேன்னு சொல்லிட்டீங்களாமே என கேட்க, அதற்கு இளையராஜாவும் ஆமா, நீ கங்கை அமரனை தான் கேட்ட அதனால் தான் அப்படி சொன்னேன் என இருவரும் சிறிதுநேரம் நட்புடன் உரையாடிவிட்டு இறுதியாக இளையராஜா இசையமைக்க ஓகே சொல்லி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... தெலுங்கில் அட்டர் பிளாப் ஆன கோட் படம்... காரணம் என்ன? புது குண்டை தூக்கிப்போட்ட வெங்கட் பிரபு
Mundhanai Mudichu
முந்தானை முடிச்சு இசையமைக்க வாய்ப்பு கொடுக்க முடியாமல் போனதால் கங்கை அமரனுக்கு மூன்று பாடல்களை எழுத வாய்ப்பளித்தார் பாக்யராஜ். அப்படி அப்படத்தில் இடம்பெற்ற விளக்கு வச்ச நேரத்துல பாட்டுக்கு முதலில் வேறு வரிகள் இருக்க, அதை இளையராஜா பாடி ரெக்கார்ட் செய்து கொண்டிருந்த சமயத்தில் பாக்கியராஜ் சில மாற்றைங்களை செய்துகொண்டு இதைப் பாடுங்கள் என சொல்லி இருக்கிறார்.
அந்தபாட்டில், ‘விளக்கு வச்ச நேரத்துல, மாமன் வந்தான்; மறைஞ்சு நின்னு பார்க்கையில தாகம் என்றான். நான் குடுக்க, அவன் குடிக்க அந்த நேரம் தேகம் சூடு ஏற’ என பாடல் வரிகள் இடம்பெற்றதை பார்த்து ஷாக் ஆன இளையராஜா, என்ன இது இவ்வளவு செக்ஸியா பாடல் வரிகளை எழுதியிருக்கிறீர்கள். இதையெல்லாம் நான் பாடமாட்டேன் என சொல்லிவிட்டாராம் இளையராஜா. பின்னர் இருவரும் வாக்குவாதம் செய்ய, பாடகி ஜானகி இருவரையும் சமாதானம் செய்து வைத்து இளையராஜாவை பாட வைத்திருக்கிறார்.
இளையராஜா, அந்த பாடலை பாடும்போது, விளக்கு வச்ச நேரத்துல தன்னா... நா.. நா, மறைஞ்சு நின்னு பார்க்கையில தன்னா... நா.. நா என பாடி இருக்கிறார். இதைக்கேட்டதும் பாட்டை நிறுத்திய பாக்யராஜ், நான் எழுதின வரியை படித்திருந்தால் ஒரு அர்த்தம் தான் புரிந்திருக்கும். ஆனால் நீங்கள் இப்படி பாடியதைக் கேட்டால் அவர்களுக்கு பல அர்த்தங்கள் புரியும் என சொல்லிவிட, இளையராஜாவும் சந்தோஷமாகி அந்த பாடலை பாடி முடித்திருக்கிறார்.
Idhu Namma Aalu
பாடலும் சூப்பர் ஹிட் ஆகிவிட்டது. பின்னர் சின்ன வீடு படம் வரை இளையராஜா உடன் பணியாற்றிய பாக்யராஜ், அதன்பின்னர் இது நம்ம ஆளு படத்துக்காக இசையமைக்க இளையராஜாவை அணுக அவரது ஆபீஸுக்கு சென்றபோது அவரது உதவியாளர், இளையராஜாவை வீட்டில் சென்று பார்க்குமாறு கூறி இருக்கிறார். உடனே பாக்யராஜ், எப்பவும் ஸ்டூடியோவில் தான பார்ப்பது வழக்கம் இப்போ என்ன புதுசா இருக்கு, நான் வந்தேன்னு அவர்கிட்ட சொல்லுங்க என சொல்லிவிட்டு கிளம்பிவிட அதன்பின் இளையராஜாவிடம் இருந்து அழைப்பு ஏதும் பாக்யராஜுக்கு வரவில்லையாம்.
இதனால் அப்செட் ஆன பாக்யராஜ், நான் ஏன் இசையமைப்பாளர் ஆகக்கூடாது என யோசித்து இசைப்பயிற்சி எடுத்து அவர் முதன்முதலில் இசையமைத்த படம் தான் இது நம்ம ஆளு. அவர் இசையமைத்த முதல் படமே பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால் தொடர்ந்து தன் படங்களுக்கு அவரே இசையமைத்து வந்தார். பாக்யராஜ் இசையமைப்பாளர் ஆன புதிதில், இப்போல்லாம் எல்லாருமே ஹார்மோனிய பெட்டியை தொட்டுவிடுகிறார்கள் என அவரை விமர்சித்து பேசியதாகவும் அந்த நேரத்தில் சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... தயாரிப்பாளர் டில்லி பாபு மரணம்... கோலிவுட்டில் இத்தனை மாஸ்டர் பீஸ் படங்களை தயாரித்துள்ளாரா?