
நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் கோட். வெங்கட் பிரபு இயக்கிய இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கோட் திரைப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்யப்பட்டது. கோட் படத்திற்கு தமிழ்நாட்டில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
இப்படத்தில் நடிகர் விஜய்யுடன் மீனாட்சி செளத்ரி, சினேகா, லைகா, பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், வைபவ், பிரேம்ஜி, அஜ்மல், ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
அதுமட்டுமின்றி நடிகை த்ரிஷா, நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோரும் கேமியோ ரோலில் நடித்து படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர். அதிலும் நடிகை த்ரிஷா, விஜய்யுடன் சேர்ந்து மட்ட பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
கோட் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பி வருகிறது. இப்படம் முதல் மூன்று நாட்களில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து இருந்தது. தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டி உள்ளது. அதுமட்டுமின்றி இப்படத்திற்கு வெளிநாட்டிலும் செம்ம ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. வெளிநாடுகளிலும் மொத்தமாக கோட் திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்... தயாரிப்பாளர் டில்லி பாபு மரணம்... கோலிவுட்டில் இத்தனை மாஸ்டர் பீஸ் படங்களை தயாரித்துள்ளாரா?
இப்படி திரும்பிய பக்கமெல்லாம் கோட் படம் வசூல் சாதனை படைத்து வந்தாலும் தெலுங்கில் அப்படம் அட்டர் பிளாப் ஆகி உள்ளதாம். கோட் படத்தின் ஆந்திரா மற்றும் தெலங்கானா வெளியீட்டு உரிமை மட்டும் ரூ.21 கோடிக்கு விற்பனை ஆனது. இப்படத்தின் தெலுங்கு வெளியீட்டு உரிமையை மைத்ரீ மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி இருந்தது. விஜய்யின் கெரியரில் தெலுங்கு மாநிலங்களில் அதிக விலைக்கு விற்பனையானது கோட் தான். இதற்கு முன்னர் லியோ படம் 16 கோடிக்கு விற்பனை ஆகி இருந்தது.
இப்படம் அம்மாநிலங்களில் பிரேக் ஈவன் செய்ய வேண்டும் என்றால் 35 கோடி வசூலிக்க வேண்டும். ஆனால் தெலுங்கில் கோட் படத்தின் ரிசல்ட் படுமோசமாக உள்ளது. அப்படம் தற்போதுவரை அங்கு வெறும் 8 கோடி தான் வசூலித்து உள்ளது. நாளுக்கு நாள் கோட் படத்திற்கான கூட்டமும் குறைந்து வருவதால் தெலுங்கில் கோட் படம் படுதோல்வியை சந்திக்க அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஆந்திராவில் கடந்த சில தினங்களாக கனமழை வெளுத்து வாங்கி வருவதும் இந்த வசூல் சரிவுக்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி வெங்கட் பிரபு தெலுங்கில் கடைசியாக இயக்கிய கஸ்டடி படம் படுதோல்வியை சந்தித்தது. அந்த படத்தின் ரிசல்டும் ஒரு காரணமாக இருக்க வாய்ப்புள்ளது.
இதனிடையே சமீபத்தில் எக்ஸ் தளத்தில் ரசிகர்களுடன் உரையாடிய இயக்குனர் வெங்கட் பிரபு, கோட் படத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பற்றிய காட்சிகள் இடம்பெற்று இருப்பதால் அப்படம் தெலுங்கு ஆடியன்ஸுக்கு ரீச் ஆகாமல் போயிருக்கலாம் என ஒரு குண்டை தூக்கிப்போட்டுள்ளார். விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த லியோ திரைப்படம் தெலுங்கில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... பிக்பாஸில் திடீர் ட்விஸ்ட்... தொகுப்பாளர் புதுசு; போட்டியாளர்கள் பழசு! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே