கன்னட மொழி குறித்து கமல் பேசிய கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், அதற்காக தான் மன்னிப்புக் கேட்கப்போவதில்லை என கமல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமலஹாசன், தமிழிலிருந்து தான் கன்னடம் தோன்றியதாக கூறினர். அவரின் இந்த கருத்து கர்நாடக மாநிலத்தில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியிருந்தது. கர்நாடக மாநிலத்தில் ‘தக் லைஃப்’ படத்தின் பேனர்கள் கிழிக்கப்பட்டு போராட்டமும் நடைபெற்றது. முதல்வர் சித்தராமையா உட்பட கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கமலஹாசனுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
25
‘தக் லைஃப்’ படத்திற்கு கடும் எதிர்ப்பு
மேலும் கன்னட ரக்ஷன வேதிகே உள்ளிட்ட அமைப்புகள் கமலஹாசன் படத்திற்கு தடை விதிக்கப்படும் என்றும், கர்நாடக மக்களுக்கு எதிராக பேசினால் போராட்டங்கள் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளன. சில கன்னட அமைப்புகள் கமலஹாசனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றன. கமலஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் ‘தக் லைஃப்’ படத்தை கர்நாடகாவில் தடை செய்வோம் என கர்நாடகா அமைச்சர் சிவராஜ் தெரிவித்திருந்தார்.
35
மன்னிப்பு கேட்க முடியாது - கமல் திட்டவட்டம்
இந்த நிலையில் தான் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என கமலஹாசன் தெரிவித்துள்ளார். கேரளாவில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், “நான் பேசியவை அனைத்தும் அன்பு மிகுதியால் வந்தவை. வரலாற்று அறிஞர்களால் மொழி குறித்த வரலாறுகள் எனக்கு கற்பிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களைப் போல் இல்லாமல் தமிழ்நாட்டில் மட்டும்தான் தமிழர், கர்நாடகாவை சேர்ந்த ஐயங்கார், ரெட்டி என பல சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முதல்வர்களாகி உள்ளனர். வேறு எந்த மாநிலத்திலும் இது போல் நடந்ததில்லை.
45
மொழி அறிஞர்கள் முடிவு செய்யட்டும்
கர்நாடகாவில் பிறந்து தமிழகத்தில் முதலமைச்சரான ஒருவருக்கு ஒருமுறை பிரச்சனை வந்த போது கன்னடர்கள் ஆதரவு கொடுத்தவுடன், அந்த முதலமைச்சரை மீண்டும் கர்நாடத்துக்கே வருமாறு அழைத்தனர். எனவே ‘தக் லைஃப்’ படத்தையும் கமலஹாசனையும் மக்கள் பார்த்துக் கொள்வார்கள். மொழி குறித்து பேச அரசியல்வாதிகளுக்கு தகுதி இல்லை. அந்த கல்வி அறிவும் அவர்களுக்கு இல்லை. இது எனக்கும் பொருந்தும். எனவே இந்த விவாதத்தை வரலாற்று அறிஞர்கள், மொழி வல்லுநர்களிடம் விட்டுவிடலாம்.
55
நான் சொன்னது சரிதான் - கமல் உறுதி
வடபகுதியைச் சேர்ந்தவர்கள் பார்வையில் பார்த்தால் அவர்கள் சொல்வது சரியாக இருக்கும். தென்குமரி பக்கம் இருந்து பார்த்தால் நான் சொன்னது தான் சரியாக இருக்கும். கன்னடர்கள் நமது குடும்பத்தைச் சேர்ந்தவர்களா அல்லது வடக்கிலிருந்து வந்த மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களா என்பதை வரலாற்று அறிஞர்கள் முடிவு செய்யட்டும். இது பதில் இல்லை. விளக்கம். அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது” என அவர் கூறினார்.