கன்னட படங்கள் என்றால் ஒரு காலத்தில் மீம்ஸ் போடுவதற்கும், ட்ரோல் செய்வதற்கும் பஞ்சமில்லாமல் இருந்து வந்தது. கன்னட சினிமாவை பொருத்தவரை, பிறமொழிகளில் வெற்றிபெற்ற படங்களை ரீமேக் செய்வதையே வழக்கமாக வைத்திருந்தனர். குறிப்பாக தமிழில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படங்கள் கன்னட மொழியில் ரீமேக் ஆகும்போது கடுமையான விமர்சனங்களை சந்திக்கும். அதற்கு சான்றாக வருத்தப்படாத வாலிபர் சங்கம், களவாணி, தேவர் மகன், பேரழகன், பிதாமகன், காஞ்சனா போன்ற படங்களை சொல்லலாம். இந்த படங்களெல்லாம் தமிழில் சக்கைப்போடு போட்ட படங்கள். ஆனால் அதனை ரீமேக் என்கிற பெயரில் கன்னடத்தில் படுமோசமாக எடுத்து வைத்திருந்தனர்.
இவ்வாறு கேலி கிண்டலுக்கு ஆளாகி வந்த கன்னட திரையுலகிற்கு திருப்புமுனை ஏற்படுத்திய படம் என்றால் அது யாஷ் நடித்த கே.ஜி.எஃப் திரைப்படம் தான். கடந்த 2018-ம் ஆண்டு ரிலீசான இப்படத்தை பார்த்து இந்திய திரையுலகமே வியந்து போனது. இதேபோல் கன்னடத்தில் வெளியான தியா, முஃப்டி போன்ற படங்களும் ஏகோபித்த வரவேற்பை பெற்றன. குறிப்பாக முஃப்டி படத்தை தழுவி தான் தற்போது சிம்பு நடிப்பில் உருவாகும் பத்து தல திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.
2022-ம் ஆண்டு கன்னட சினிமாவிற்கு ஒரு பொற்காலமாக அமைந்துள்ளன. குறிப்பாக இந்த ஆண்டில் மட்டும் கன்னடத்தில் வெளியான 5 திரைப்படங்கள் 100 கோடிக்கு மேல் வசூலித்து வேறலெவல் வெற்றியை பெற்றுள்ளன. இதனால் இந்திய திரையுலகின் பார்வையே கன்னட சினிமா பக்கம் திரும்பி உள்ளது. அந்த வகையில் 2022-ல் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 5 கன்னட படங்களைப் பற்றி தற்போது பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... GP muthu : தனது சோகத்தை சொல்ல ஆளில்லாமல் தவிக்கும் ஜிபி முத்து...கிண்டலடிக்கும் ரசிகர்கள்
கே.ஜி.எஃப் 2
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்திருந்த கே.ஜி.எஃப் 2 திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டன்று ரிலீசானது. சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் உலகளவில் 1250 கோடிக்கு மேல் வசூலித்து பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்தது. இந்த ஆண்டு இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளில் வெளியான படங்களோடு ஒப்பிடுகையில் அதிகம் வசூலித்து 2022-க்கான இந்திய பாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1 இடத்தில் உள்ளது கே.ஜி.எஃப் 2. ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது.
காந்தாரா
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த படம் காந்தாரா. இப்படம் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி வெளியானது. கன்னடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் டப் செய்யப்பட்டு கடந்த அக்டோபர் 14-ம் தேதி இந்தியிலும் அக்டோபர் 15-ந் தேதி தமிழ் மற்றும் தெலுங்கிலும், அக்டோபர் 20-ந் தேதி மலையாளத்திலும் வெளியிடப்பட்டது. வெறும் 16 கோடி பட்ஜெட்டில் மட்டும் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது உலகளவில் ரூ.300 கோடியைக் கடந்து வசூல் சாதனையுடன் வெற்றிநடை போட்டு வருகிறது.
விக்ராந்த் ரோனா
சுதீப் நடிப்பில் வெளியான படம் விக்ராந்த் ரோனா. கடந்த ஜூலை மாதம் வெளியான இப்படத்தை அனூப் பண்டாரி இயக்கி இருந்தார். பான் இந்தியா படமாக ரிலீசான இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்ணாண்டஸும் நடித்திருந்தார். சுமார் 100 பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் உலகளவில் ரூ.210 கோடி வசூலித்து கன்னடத்தில் அதிக வசூல் ஈட்டிய படங்களின் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.
ஜேம்ஸ்
கடந்த ஆண்டு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த புனீத் ராஜ்குமார் கடைசியாக நடித்த திரைப்படம் தான் ஜேம்ஸ். 70 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஆக்ஷன் திரில்லராக உருவான இப்படத்தை சேத்தன் குமார் என்பவர் இயக்கி இருந்தார். இப்படத்தில் புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்திருந்தார். கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி பிரம்மாண்டமாக ரிலீசான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.151 கோடி வசூலித்து சாதனை படைத்தது.