சமீபத்தில் 80ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்தமான நாயகனாக வலம் வந்த டாக்டர் ராஜசேகர், ஜீவிதா தம்பதி மற்றும் அவர்களுடைய மகள்களுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது.
தெலுங்கில் முன்னணி ஹீரோவாக வலம் வந்த டாக்டர் ராஜசேகர் புதுமைப்பெண், புதிய தீர்ப்புகள், மீசைக்காரன், மன்னிக்க வேண்டுகிறேன் உள்பட சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழில், தப்புக் கணக்கு, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, ராஜமரியாதை, தர்மபத்தினி, இளமை, நானே ராஜா நானே மந்திரி உட்பட பல படங்களில் நடித்தவர் நடிகை ஜீவிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
டாக்டர் ராஜசேகர் - ஜீவிதா தம்பதிக்கு ஷிவானி, ஷிவாத்மிகா என இரு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் டாக்டர் ராஜசேகர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், “ஜீவிதா, குழந்தைகள் மற்றும் எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உண்மைதான். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறோம். மகள்கள் வெளியேறிவிட்டார்கள். நானும் ஜீவிதாவும் இப்போது நன்றாக இருக்கிறோம். விரைவில் வீடு திரும்புவோம்” என்று பதிவிட்டிருந்தார்.
இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்ட ராஜசேகரின் உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின..
இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய மகள் ஷிவாத்மிகா “உங்கள் அன்புக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி சொல்ல இயலாது. தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள், அவர் கவலைக்கிடமான நிலையில் இல்லை. நன்றாக இருக்கிறார். உடல்நலம் பெற்று வருகிறார். உங்கள் பிரார்த்தனைகள் தேவை. பீதியடைய வேண்டாம். வதந்தி பரப்ப வேண்டாம்” என கோரிக்கை வைத்துள்ளார்.