வீரம் படத்தில் நடிகர் அஜித்தின் தம்பியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் பாலா. இவர் இயக்குனர் சிறுத்தை சிவாவின் உடன் பிறந்த சகோதரர் ஆவார். நடிகர் பாலா தமிழைக் காட்டிலும் மலையாள சினிமாவில் தான் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். இவர் சினிமாவில் நடித்து பிரபலமானதை விட சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானது தான் அதிகம். இவர் இதுவரை நான்கு முறை திருமணம் செய்திருக்கிறார். அதில் முதல் மூன்று திருமணங்கள் விவாகரத்தில் முடிந்தன. பின்னர் நான்கவதாக தன்னுடைய உறவுக்கார பெண்ணான கோகிலாவை திருமணம் செய்துகொண்டு அவருடன் குடும்பம் நடத்தி வருகிறார் பாலா.
24
பாலா மீது முன்னாள் மனைவி புகார்
இந்த நிலையில் நடிகர் பாலாவின் மூன்றாவது மனைவியான டாக்டர் எலிசபெத், பாலா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதோடு, தன்னுடைய உயிருக்கு ஏதாவது ஆனால் அதற்கு பாலா தான் காரணம் என்று கூறி மருத்துவமனையில் இருந்து வீடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தான் பாலா மீது பல முறை புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அந்த வீடியோவில் அவர் கூறி இருக்கிறார். பாலா தன்னை உடல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அவரது குடும்பத்தினர் தன்னைப்பற்றி அவதூறு பரப்பி வருவதாகவும் எலிசபெத் அந்த வீடியோவில் கூறி இருக்கிறார்.
34
எனக்கு ஏதாவது நடந்தால் பாலா தான் பொறுப்பு
அதில் அவர் பேசி இருப்பதாவது : "பாலாவால் நான் பல மிரட்டல்களையும் பொய் வழக்குகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. என்னுடன் திருமணமாகவில்லை என்று பாலா கூறுவது எல்லாம் வெறும் பொய். பிறகு ஏன் அவர் என்னை தனது மனைவி என்று கூறி பொது மேடைகளுக்கு அழைத்துச் சென்றார் என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு ஏதாவது நடந்தால், அதற்கு பாலாதான் பொறுப்பு. காவல்துறையினர் புகார்களை ஏற்றுக்கொள்வதில்லை என்று கூறி முதலமைச்சரிடம் புகார் அளித்தேன்.
நான் அளித்த புகார் டி.எஸ்.பி அலுவலகத்தை அடைந்தது. ஒருமுறை அவர் வீட்டிற்கு வந்து என்னிடம் விசாரித்தார். பின்னர் எதுவும் நடக்கவில்லை. வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதிலும் பாலா பல முறை ஆஜராகவில்லை. பாலா 250 கோடி சொத்துக்கள் கொண்ட நபர். என்னை திருமணம் செய்யவில்லை. எனக்கு அவருக்கும் இடையே மருத்துவர் - நோயாளி என்கிற உறவு மட்டுமே இருந்ததாக பாலா கூறுகிறார். அது பொய், நான் நீதிக்காகப் போராடுவேன் என்று எலிசபெத் கூறினார்.
தொடர்ந்து பேசியுள்ள அவர், "நான் முதலமைச்சரிடம் புகார் அளித்துள்ளேன். நீதிமன்றத்திலும் புகார் அளித்துள்ளேன். ஆனால் இன்னும் எனக்கு நீதி கிடைக்கவில்லை. எனக்கு ஏதாவது நடந்தால், அது பாலாவால் தான். நான் ஏமாற்றப்பட்டுள்ளேன். நான் அவரால் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன். பாலா மட்டுமல்ல, அவரது முழு குடும்பமும் என்மீது அவதூறு பரப்பி உள்ளனர். பெண்களுக்கு நீதி கிடைக்கும் என்று கூறுகிறார்கள். ஆனால் பணமும் செல்வாக்கும் உள்ளவர்களுக்கு மட்டுமே நீதி கிடைக்கும் என்று நான் உணர்கிறேன். இந்த வீடியோ வெளியாகும்போது என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. நான் உயிருடன் இருப்பேனா என்று கூட எனக்குத் தெரியவில்லை" என உருக்கமாக பேசி இருக்கிறார் எலிசபெத்.