தெலுங்கில் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரபாஸ், பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தார்.
பிரம்மாண்டம், வசூல், விமர்சனம் என அனைத்துமே ஒட்டுமொத்த திரையுலகமும் டோலிவுட்டை பெருமையுடன் திரும்பி பார்க்கும் அளவிற்கு அமைந்தது.
தற்போது இன்னும் பெயரிடப்படாத பிரபாஸின் 21வது படத்தை நாக் அஸ்வின் இயக்க உள்ளார். இந்த படத்தில் பிரபாஸுடன் சேர்ந்து தீபிகா படுகோனே நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு பிரபாஸுக்கு பேசப்பட்டுள்ள சம்பளமே சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இணையானது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்க உள்ள ஆதிபுருஷ் என்ற படத்திலும் பிரபாஸ் நடிக்க உள்ளார். இந்த படம் பாகுபலியை மிஞ்சிய பிரம்மாண்டமாக இருக்கும் என கூறப்பட்டது.
இதில் ராமர் வேடத்தில் பிரபாஸ் நடிக்க உள்ளார். சீதையாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் ஆதிபுருஷ் படத்தின் பட்ஜெட்டாக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 3டி தொழில்நுட்பத்தில் உருவாக உள்ளதால் படத்திற்கு இந்த பட்ஜெட்டாம்.
படத்தில் அதிகப்படியான விஎஃப்எக்ஸ் காட்சிகள் இடம் பெற உள்ளதால் அதற்கு மட்டும் 250 கோடி அதாவது பட்ஜெட்டில் பாதி தொகையை ஒதுக்கியிருக்கிறார்களாம்.
இந்த படத்தின் விஎஃப்எக்ஸ் பட்ஜெட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷய் குமார் நடித்த 2.0 படத்தின் விஎஃப்எக்ஸ் பட்ஜெட்டை விட அதிகம் என கூறப்படுகிறது. அதனால் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை அவதார் பட லெவலுக்கு எடுக்க இயக்குநர் திட்டமிட்டுள்ளாராம்.