
Dhanush's Costliest Movie Kubera Salary Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். கடந்த மாதம் தலைப்புச் செய்திகளில் வலம் வந்தார். நானும் ரௌடி தான் பட காட்சிகளை தன்னுடைய அனுமதி இல்லாமல் பயன்படுத்திய நயன்தாராவின் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். மேலும், ஐஸ்வர்யா உடனான திருமண வாழ்க்கைக்கு நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. இப்படி தலைப்புச் செய்திகளில் வலம் வந்த தனுஷ் இப்போது குபேரா என்ற தெலுங்கு படத்திலும், இட்லி கடை என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இட்லி கடை படத்தை எழுதி, இயக்கி, நடித்து, தயாரிக்கவும் செய்துள்ளார். மேலும் ஆகாஷ் பாஸ்கரனும் இந்தப் படத்தை தனுஷுடன் இணைந்து தயாரித்துள்ளார். இந்தப் படம் தவிர்த்து தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படமும் தயாராகி வருகிறது. இந்த நிலையில் தான் தனுஷ் தற்போது நடித்து வரும் படம் தான் குபேரா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படத்தை சேகர் கம்முலா இயக்கி வருகிறார்.
குபேரா படத்தில் தனுஷ் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜூனா, சுனைனா ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். அமிகோஸ் கிரியேஷன்ஸ், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி ஆகிய நிறுவனங்கள் இந்த படத்தை தயாரித்து வருகின்றன. இந்த நிலையில் தான் தனுஷின் லட்சிய படம் என்று சொல்லப்படும் குபேரா படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது என்று சொல்லப்படுகிறது.
வரும் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரும் காதலர் தினத்தை முன்னிட்டு இந்தப் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சமீபத்திய அறிக்கையின்படி அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாக இப்போது குபேரா மாறியுள்ளது. டிராக் டோலிவுட் செய்தி அறிக்கையின்படி குபேராவின் பட்ஜெட் ரூ.90 கோடிக்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பட்ஜெட் கணிசமாக அதிகரித்துள்ளது இப்போது ரூ.120 கோடியில் வந்து நிற்கிறது. படத்தின் மொத்த பட்ஜெட் பற்றி தயாரிப்பாளர் சுனில் நரங் எதுவும் கூறவில்லை. எனினும், இது தனுஷின் சினிமா வாழ்க்கையில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விலையுயர்ந்த படமாக சொல்லப்படுகிறது.
தனுஷ் மற்றும் நாகர்ஜூனாவின் நடிப்பை சுனில் நரங் வெகுவாக பாராட்டியுள்ளார். இந்த லட்சிய படம் அதிக வசூல் குவிக்கும் என்று தயாரிப்பாளர் நம்பிக்கையுடன் இருப்பதால் தெலுங்கு சினிமாவில் அதிக வசூல் குவிக்கும் படங்களில் ஒன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
கிரேட் அந்தேரா அறிக்கையின்படி, குபேரன் படத்தில் தனுஷிற்கு ரூ.30 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் பட்ஜெட்டில் 36 சதவிகிதம் தனுஷின் சம்பளமாம். இருப்பினும் தனுஷ் மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சில் அதிருப்தி அடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள்து.
படத்திற்கு அட்வான்ஸ் பெற்றுக் கொண்டாலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு உரிய மரியாதை அளிப்பதில்லை என்று தனுஷிடம் சுட்டிக் காட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தெலுங்கு படங்களுக்கு அவர் வாங்கும் சம்பளமே காரணமாக சொல்லப்படுகிறது. தனுஷ் தனது சர் படத்திற்காக ரூ.25 கோடி பெற்றாலும், தமிழ் படங்களுக்கு அவரது சம்பளம் பெரும்பாலும் ரூ.15 கோடியை விட குறைவாகவே இருக்குமாம்.