
கோவையை அடுத்த கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசனின் தீவிர ரசிகரான இவர், அவரின் ஒரு படம் விடாமல் பார்த்துவிடுவாராம். லோகேஷுக்கு சினிமாவின் மீது ஆசையை தூண்டிவிட்டதே கமல்ஹாசனின் படங்கள் தானாம். சினிமா மோகம் இருந்தாலும் குடும்பத்தை காப்பாற்ற வங்கியில் வேலைபார்த்து வந்தார் லோகி. ஒரு கட்டத்தில் இவர் இயக்கிய குறும்படம் ஒன்று நல்ல வரவேற்பை பெற்றதும், லோகிக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்துள்ளது.
அப்படி லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் படம் தான் மாநகரம். ஒருநாள் இரவில் நடக்கும் கதையை சுவாரஸ்யமாக சொல்லி, ரசிகர்களை சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்க வைத்தார் லோகி. மாநகரம் படம் கடந்த 2017-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படம் லோகேஷ் கனகராஜ் என்கிற ஆகச்சிறந்த இயக்குனருக்கு அடையாளமாக மாறியது. மாநகரம் படத்தின் வெற்றிக்கு பின் அவருக்கு இரண்டு பட வாய்ப்புகள் கிடைத்தன.
அதில் ஒன்று கைதி திரைப்படம். நடிகர் மன்சூர் அலிகானை மனதில் வைத்து தான் இப்படத்தின் கதையை எழுதி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ஆனால் அந்த சமயத்தில் அவர் சிறையில் இருந்ததால் அவருக்கு பதில் கார்த்தியை நடிக்க வைத்திருக்கிறார் லோகி. கைதி படம் தமிழ் சினிமாவில் ஒரு டிரெண்ட் செட்டராக மாறியது. அப்படத்தின் மூலம் தனக்கென ஒரு தனி யூனிவர்ஸை உருவாக்கினார் லோகேஷ் கனகராஜ்.
கைதி ரிலீஸ் ஆகும் முன்னரே லோகேஷ் கனகராஜ் கமிட்டான மற்றொரு படம் விஜய்யின் மாஸ்டர். கொரோனா ஊரடங்கு காரணமாக சுமார் ஓராண்டு படத்தை ரிலீஸ் செய்யாமல், காத்திருந்த மாஸ்டர் படக்குழுவிடம் ஓடிடி நிறுவனங்களும் நேரடி வெளியிட்டிற்காக பெரும் தொகையை கொடுக்க முன்வந்தனர். ஆனால் தியேட்டரில் தான் ரிலீஸ் செய்வேன் என்கிற முடிவில் விஜய் தீர்க்கமாக இருந்ததால், அந்த சமயத்தில் துவண்டு கிடந்த தமிழ்சினிமாவை மீட்டெடுக்க உதவியது மாஸ்டர் படம்.
மாஸ்டர் படம் மூலம் ஹாட்ரிக் ஹிட் கொடுத்த லோகிக்கு தன்னுடைய ஆஸ்தான குருவான கமல்ஹாசனை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு வீடு தேடி வந்தது. அதை வேறலெவலில் பயன்படுத்திக் கொண்ட லோகேஷ் கனகராஜ், தன்னுடைய எல்சியூ எனும் யூனிவர்ஸை பெரிதாக்கும் படமாக விக்ரமை பயன்படுத்திக் கொண்டு ஹாலிவுட் தரத்தில் உருவாக்கினார். கமல்ஹாசனின் கெரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக விக்ரம் அமைந்தது.
இதையும் படியுங்கள்... ஜெட் வேகத்தில் நடக்கும் ஷூட்டிங்; கூலி பட ரிலீசுக்கு தேதி குறித்த லோகேஷ் கனகராஜ்!
விக்ரம் வெற்றியை தொடர்ந்து தன்னுடைய சினிமேட்டிக் யூனிவர்ஸை மேலும் விரிவுபடுத்த விஜய்யுடன் இணைந்து லியோ என்கிற பிரம்மாண்ட பட்ஜெட் படத்தை உருவாக்கினார். இப்படம் சற்று கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை ஆடியது. லியோ திரைப்படம் ரூ.600 கோடி வசூலித்து விஜய்யின் கெரியர் பெஸ்ட் வசூல் படம் என்கிற அங்கீகாரத்தையும் பெற்றது.
விஜய்யை வைத்து அடுத்தடுத்து இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷை அலேக்காக தூக்கிச் சென்ற ரஜினிகாந்த், அவர் இயக்கத்தில் தற்போது கூலி என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர கைதி 2, விக்ரம் 2, ரோலெக்ஸ், இரும்புக்கை மாயாவி என லோகேஷின் லைன் அப் நீண்டு கொண்டே செல்கிறது.
இப்படி லோகேஷ் தொட்டதெல்லாம் ஹிட் ஆவதால், கோலிவுட்டின் ஹிட்மேனாகவும் இவர் வலம் வருகிறார். மாநகரம் படத்திற்காக வெறும் 5 லட்சம் மட்டுமே சம்பளம் வாங்கிய லோகேஷ் கனகராஜ் இன்று கோலிவுட்டில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்ததுடன் ஒரு படத்திற்கு ரூ.50 கோடிக்கு மேல் சம்பளமும் வாங்கி வருகிறார். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனரும் இவர் தான்.
இப்படி ஜீரோ பிளாப் இயக்குனர் என பெயரெடுத்த லோகேஷ் கனகராஜின் சொத்து மதிப்பும் படத்துக்கு படம் எகிறிக் கொண்டே செல்கிறது. தற்போதைய நிலவரப்படி இவரின் சொத்து மதிப்பு ரூ.100 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இவர் லெக்சஸ், பிஎம்டபிள்யூ என பல்வேறு சொகுசு கார்களையும் சொந்தமாக வைத்திருக்கிறார்.
இதையும் படியுங்கள்... லோகேஷ் கனகராஜ்; சினிமாட்டிக் யூனிவெர்ஸில் இணைந்த இசையமைப்பாளர் - வைரல் வீடியோ!