சுமார் ரூ.12 கோடி பட்ஜெட்டில், 100+ தொழில்நுட்பக் கலைஞர்கள் 2 ஆண்டுகள் உழைத்து உருவாக்கிய ஏ.ஐ படத்திற்கு நாடு முழுவதும் 10,000 காட்சிகள் ஒதுக்கப்பட்டன. இருப்பினும், முன்பதிவில் வெறும் ரூ.8 லட்சம் மட்டுமே வசூலான நிலையில், படக்குழு அதிர்ச்சி!
ரூ.12 கோடி பட்ஜெட்... முன்பதிவில் தேறியது வெறும் ரூ.8 லட்சம்!
சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சி உலக அரங்கில் உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில், அந்நாட்டின் முதல் முழு நீள AI திரைப்படமான 'சான்சிங்துய்: ஃபியூச்சர் பாஸ்ட்' (Sanxingdui: Future Past) திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடம் போதிய வரவேற்பைப் பெறாமல் பாக்ஸ் ஆபிஸில் கடுமையான சவாலைச் சந்தித்துள்ளது. சுமார் 10 மில்லியன் யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.12.5 கோடி / $1.5 மில்லியன்) பொருட்செலவில், 100-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் 2 ஆண்டுகள் இரவு பகலாக உழைத்து இந்த அறிவியல் புனைகதை திரில்லர் (Sci-Fi Thriller) திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர்.
25
10,000 காட்சிகள்... ஆனால் காலியான திரையரங்குகள்!
சீனாவின் முன்னணி திரைப்பட டிக்கெட் முன்பதிவு தளமான 'மாவோயன்' (Maoyan) தகவலின்படி, இத்திரைப்படத்திற்கு வெள்ளிக்கிழமை மட்டும் நாடு முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட திரையிடல்கள் (Screenings) ஒதுக்கப்பட்டிருந்தன. இருப்பினும், மக்கள் மத்தியில் இப்படத்திற்கு எந்தவொரு பெரிய எதிர்பார்ப்பும் ஏற்படவில்லை. வியாழக்கிழமை மாலை வரையிலான முன்தோக்கிய டிக்கெட் விற்பனையில் (Pre-sales), வெறும் 65,000 யுவான் (சுமார் ரூ.8 லட்சம் / $9,700) மட்டுமே வசூலாகியுள்ளது. படத்தின் மொத்த திரையரங்கு வசூலே 1,00,000 யுவானைத் (சுமார் ரூ.12 லட்சம்) தாண்டாது என கணிக்கப்பட்டுள்ளது. இது படத்தின் தயாரிப்புச் செலவில் ஒரு சிறு துளி கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
35
எல்லைகளை உடைக்க முயன்றிருக்கிறோம் – தயாரிப்பு நிறுவனம்
இந்தக் கடுமையான பின்னடைவை ஏற்றுக்கொண்ட தயாரிப்பு நிறுவனமான போனா ஃபிலிம் குரூப்பின் (Bona Film Group) தலைமை நிர்வாக அதிகாரி ஜியாங் டெஃபு, "சீனாவில் AI தொழில்நுட்பத்தில் முழுப் படத்தை உருவாக்கியதும் நாங்கள்தான்; திரையரங்குகளில் வெளியிடத் தணிக்கை அனுமதி பெற்றதும் நாங்கள்தான்; ரசிகர்களின் நேரடி பார்வைக்கு முன்வைத்ததும் நாங்கதான். சினிமாத்துறையின் எல்லைகள் உடைத்து ஒரு புதிய முயற்சியை எடுப்பது எளிதான காரியமல்ல" என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அவதார் அளவுக்கு இருந்தா காசு தருவேன் – ரசிகர்கள் அடம்
வியாழக்கிழமை நடந்த சிறப்பு இலவச திரையிடலைப் பார்த்த பார்வையாளரான ஐரிஸ் யாங் என்பவர் கூறுகையில், படத்தின் தரத்தைப் பார்த்தால் இதற்கு நான் நிச்சயம் காசு கொடுத்து டிக்கெட் வாங்கியிருக்க மாட்டேன். ஹாலிவுட்டின் 'அவதார்' போன்ற படங்களின் விஷுவல் அனுபவத்தை ஏ.ஐ தொழில்நுட்பத்தால் தர முடிந்தால் மட்டுமே மக்கள் பணம் கொடுத்துப் பார்ப்பார்கள் என்று வெளிப்படையாக கூறினார்.
சீனாவின் டிக்டாக் செயலியான 'டூயின்' (Douyin)-ல் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட குறும்படங்கள் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 20,000 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளன. ஆனால், ஒரு படம் AI-ல் உருவாக்கப்பட்டது என்பதற்காகவே மக்கள் தானாகத் திரையரங்குகளுக்கு வந்து டிக்கெட் வாங்க மாட்டார்கள் என AI திரைப்பட இயக்குநர் ஜாங் ஜுன் தெரிவித்துள்ளார். இலவசமாக இணையத்தில் வெளியிட்டால் ஒருவேளை கொண்டாடியிருக்கலாம்; காசு கொடுத்துப் பார்க்கும் அளவுக்கு ரசிகர்கள் இந்தத் தொழில்நுட்பத்தை இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என சீன சமூக வலைதளமான வெய்போவில் (Weibo) நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
55
ஹாலிவுட்டை அச்சுறுத்தும் AI திரைப்படங்கள்
ஒருபுறம் வசூலில் அடிவாங்கினாலும், உலகளவில் ஏ.ஐ படங்களின் வருகை கலைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறித்துவிடுமோ என்ற அச்சத்தை ஹாலிவுட் சினிமா வட்டாரத்தில் கிளப்பியுள்ளது. அமெரிக்காவில் டிச.4 அன்று 'காட்ஸ் டோன்ட் கிவ் கிஃப்ட்ஸ்' (Gods Don't Give Gifts) என்ற முழு நீள AI அறிவியல் திரைப்படம் வெளியாகவுள்ளது. மேலும், மனிதர்களைப் போலவே இணையத்தில் வைரலான 'டில்லி நார்வுட்' (Tilly Norwood) என்ற விர்ச்சுவல் (Virtual) ஹாலிவுட் நடிகை நடித்துள்ள 'மிஸ்அலைண்ட்' (Misaligned) திரைப்படமும் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.