ஆன்லைன் தளங்களில் வெளியாகும் வெப் சீரிஸ்களுக்கு தணிக்கை என்பதே இல்லை என்பதால் நாளுக்கு நாள் ஆபாசம் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார், எம்.எக்ஸ் பிளேயர், ஜீ5 ஆகிய ஓடிடி தளங்களில் அளவில்லாத படங்களும், வெப் தொடர்களும் கொட்டிக்கிடக்கிறது.
ஆனால் அத்துடன் சேர்த்து நெருக்கமான படுக்கை அறை காட்சிகள், லிப் லாக், இரட்டை அர்த்த வசனங்கள், காது கூசும் கெட்ட வார்த்தைகள் என ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களில் வெப் சீரிஸ் என்ற பெயரில் கொட்டி கிடக்கும் ஆபாச படங்களை நீக்க போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
விக்ரம் சேத் எழுதிய நாவல் தான் ‘எ சூட்டபிள் பாய்’. இந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு அதே டைட்டில் உடன் வெப் சீரிஸை மீரா நாயர் இயக்கியுள்ளார்.
இஷான் கட்டர், தபு, தன்யா உள்ளிட்டோர் நடித்திருக்கும் இத்தொடர் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் இந்து பெண் ஒருவரை கோவிலுக்குள் வைத்து அவருடைய காதலரான இஸ்லாமிய இளைஞர் உதட்டோடு உதடு வைத்து முத்தமிடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்து மதத்தையும், இந்துக்களின் மனதையும் புண்படுத்திய இந்த காட்சியை நீக்க வேண்டும் என்றும், இப்படிப்பட்ட காட்சியை ஒளிபரப்பியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நெட் ஃபிளிக்ஸிற்கு எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது.
இதையடுத்து நெட்ஃபிளிக்ஸ் தளத்தை புறக்கணிப்போம் என்பதாகக் கூறி #BanNetflix, #boycottnetflix ஆகிய ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளன.
மத்திய பிரதேசம் மகேஷ்வர் நகரில் உள்ள கோயிலில் முத்தக் காட்சி படமாக்கப்பட்டுள்ளதால் இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.