சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள நடிகை நயன்தாராவின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திரைப் பிரபலங்களுக்கும், அரசியல் கட்சி தலைவர்களின் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது தொடர்கதை ஆகி வருகிறது. கடந்த வாரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு, நடிகை திரிஷா வீடு, நடிகை ஸ்வர்ணமால்யா வீடு ஆகியவற்றிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு டிஜிபி அலுவலகத்துக்கு மெயில் வந்திருந்தது. இதையடுத்து அங்கு சென்று சோதனை நடத்திய பின்னர் தான் அது போலியான மிரட்டல் என தெரியவந்தது.
24
வெடிகுண்டு மிரட்டல்
இந்த நிலையில், நேற்று சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்துக்கு நேற்று ஒரு வெடிகுண்டு மிரட்டல் மெயில் வந்திருந்தது. அதில் ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் அமைந்துள்ள நடிகை நயன்தாராவுக்கு சொந்தமான சொகுசு வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டு மர்ம நபர் ஒருவர் மெயில் அனுப்பி இருக்கிறார். இதனால் அதிரடி ஆக்ஷனில் இறங்கிய தேனாம்பேட்டை போலீசார் மோப்ப நாய் உதவியுடன் அங்கு சென்று சோதனை நடத்தினர்.
34
போலீஸ் சோதனை
சோதனையின் முடிவில் வழக்கம்போல் இதுவும் வெறும் புரளி தான் என தெரியவந்தது. இந்த மெயிலை அனுப்பிய மர்ம நபர் யார் என்பதை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். வீனஸ் காலனியில் உள்ள சொகுசு இல்லத்தில் அடிக்கடி குடும்பத்தினருடன் வந்து தங்கி பொழுதை கழிப்பாராம் நயன்தாரா. தற்போது அவர் ஷூட்டிங்கிற்காக வெளி மாநிலம் சென்றுவிட்டதால், அந்த வீடு பூட்டப்பட்டு இருந்தது. பாதுகாவலர்கள் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. சுந்தர் சி இயக்கும் இப்படம் 100 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது. ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார். இதுதவிர யாஷ் நடிப்பில் உருவாகி வரும் டாக்ஸிக் என்கிற பான் இந்தியா படத்திலும் நடித்து வருகிறார் நயன்தாரா. அப்படத்தில் யாஷுக்கு அக்காவாக நயன்தாரா நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதுதவிர சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்கிறார்.