அல்லிநகரத்து கில்லி... முதல் மரியாதைக்கு சொந்தக்காரர்! இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் பிறந்தநாள் இன்று

First Published | Jul 17, 2023, 1:14 PM IST

இன்று 82-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Bharathiraja

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனராக திகழ்பவர் பாரதிராஜா. அல்லிநகரத்தில் பிறந்து தமிழ் சினிமாவின் ஆளுமையாக மாறிய இந்த மாபெரும் கலைஞன், ஒரு டிரெண்ட் செட்டராகவும் திகழ்ந்து வருகிறார். ஸ்டூடியோக்களுக்குள் சுழன்று கொண்டிருந்த தமிழ் சினிமாவை கிராமங்களை நோக்கி படையெடுக்க வைத்தவர் பாரதிராஜா தான். இன்று உச்சத்தில் இருக்கும் அனைத்து இயக்குனர்களுக்கும் இவரின் படங்கள் தான் முன்மாதிரியாக இருக்கின்றன.

ilayaraja bharathiraja

1977-ம் ஆண்டு தமிழில் முதன்முறையாக இயக்குனராக அறிமுகமானார் பாரதிராஜா. இவர் முதன்முதலில் இயக்கிய 16 வயதினிலே திரைப்படம் தான் அவர் இயக்கிய முதல் படம். அப்படத்தின் மூலம் ஒரு பெரிய வரலாற்றை எழுத தொடங்கினார் பாரதிராஜா. இப்படத்தின் வெற்றி, பல்வேறு கிராமத்து இளைஞர்களுக்குள் இருந்த சினிமா ஆசையை தூண்டிவிட்டது. அவரைப்போல படமெடுக்க வேண்டும் என்கிற கனவோடு அந்த சமயத்தில் சினிமாவுக்கு வந்தவர்கள் ஏராளம்.

Tap to resize

Bharathiraja

பாரதிராஜாவிடன் உதவி இயக்குனர்களாக பணியாற்றிய பலர் பின் நாட்களில் தமிழ் சினிமாவில் மிக முக்கிய இயக்குனர்களாக உருவெடுத்தார்கள். இன்றளவும் இவரது படங்களை பார்த்து இயக்குனர்களும், படத்தொகுப்பாளர்களும் எடிட்டிங் பேட்டர்னை கற்றுக்கொள்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. சினிமா தெரியாதவர் கூட இவர் படங்களைப் பார்த்து சினிமாவை கற்றுக்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்... விஜய் பாணியில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை... ரஜினி ரசிகர்கள் அதிரடி அறிவிப்பு

மாறி வரும் காலச்சூழலில், தொலைந்து கொண்டிருக்கும் தமிழர் நாகரீகத்தை அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் காட்டக்கூடிய வரலாற்று பொக்கிஷங்களாக பாரதிராஜாவின் படங்கள் உள்ளன. மண்வாசனையின் சொந்தக்காரரான இவர், தமிழ்நாட்டு கிராமங்களின் வாழ்வியலை ரத்தமும் சதையுமாக திரைப்படங்களில் பதிவு செய்ய முடியும் என காட்டிய பெரும் கலைஞன். 80 வயதைக் கடந்துவிட்ட நிலையில், மனதளவில் இன்னும் யூத் ஆகவே இருந்து வருகிறார். கலை மீது அவர் கொண்ட ஆர்வத்தையும் காதலையும் இன்றும் உயிர்ப்புடன் வைத்துக் கொண்டிருக்கிறார். 

பல விமர்சனங்களை அவர் சந்தித்தாலும், அவரின் முரட்டுத்தனமான அன்பை பெற யாரும் தயங்குவதே இல்லை. அவர் படமெடுத்து பல வருடங்கள் ஆனாலும், தமிழ் திரையுலகம் அவரை மறக்கவில்லை. இன்று வரை தமிழ் சினிமாவின் முகமாக பாரதிராஜா இருந்துகொண்டு தான் இருக்கிறார். தமிழ் சினிமாவில் அவர் ஏற்படுத்திய புதிய அலை ஒருபோதும் ஓயப்போவதில்லை. இன்று பிறந்தநாள் காணும் இந்த அல்லிநகரத்து அரசனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 

இதையும் படியுங்கள்... ஜவான் படத்தில் நடிக்க காரணம் என்ன?.. மனம் திறந்த மக்கள் செல்வன் - அதுல அவர் சொன்ன ஒரு விஷயம் தான் ஹை லைட்!

Latest Videos

click me!