பாலிவுட்டில் பிரபல இசையமைப்பாளராக வலம் வந்தவர் பப்பி லஹிரி (Bappi lahiri). கடந்த 1952-ம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்த இவர், 3 வயதிலிருந்தே இசை மீது ஆர்வம் கொண்டிருந்தார். இதையடுத்து படிப்படியாக இசை கற்று பின்னர் திரையுலகில் இசையமைப்பாளராகவும், பாடகராகவும் ஜொலித்தார்.
இவர் இந்தி மற்றும் பெங்காலியில் பல்வேறு படங்களுக்கு இசையமைத்துள்ள பப்பி லஹிரி (Bappi lahiri), தெலுங்கு, தமிழ், கன்னடம், குஜராத்தி போன்ற மொழிகளிலும் சில படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
குறிப்பாக தமிழில் இவர் 3 படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழில் இவர் அறிமுகமான படம் அபூர்வ சகோதரிகள் (Apoorva Sahodarigal). ஆர்.தியாகராஜன் இயக்கி இருந்த இப்படத்தில் கார்த்திக், ராதா, சுரேஷ், சுகாசினி, ஊர்வசி ஆகியோர் நடித்திருந்தனர். கடந்த 1983-ம் ஆண்டு இப்படம் வெளியானது.
இதையடுத்து 1985-ம் ஆண்டு வெளியான பாடும் வானம்பாடி (Paadum Vaanampadi) என்கிற படத்துக்கு இசையமைத்திருந்தார் பப்பி லஹிரி. இது இந்தியில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான டிஸ்கோ டான்சர் என்கிற படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.
ஆனந்த்பாபு, நாகேஷ், ஜீவிதா நடிப்பில் உருவாகி இருந்த இப்படத்தை எம்.ஜெய்குமார் இயக்கி இருந்தார். இப்படத்தில் இடம்பெறும் நானொரு டிஸ்கோ டான்சர் என்கிற பாடல் ரசிகர்களால் பட்டிதொட்டியெங்கும் கொண்டாடப்பட்டது. இப்பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடி இருந்தார்.
பப்பி லஹிரி தமிழில் கடைசியாக இசையமைத்த படம் ‘கிழக்கு ஆப்ரிக்காவில் ஷீலா’ (Kizhakku Africavil Sheela). இப்படம் கடந்த 1987-ம் ஆண்டு வெளியானது. துவாரகிஷ் இயக்கி இருந்த இந்த படத்தில் சுரேஷ், காஞ்சனா, ஷாகிலா சாதா ஆகியோர் நடித்திருந்தனர். இது ஒரு கன்னட படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தமிழிலும் குறிப்பிடத்தக்க வெற்றிப்பாடல்களை கொடுத்துள்ள இசையமைப்பாளர் பப்பி லஹிரி (Bappi lahiri) உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு திரையுலகினரையும், இசை ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.