
திரைத்துறையில் பல நல்ல நடிகர்கள் குறுகிய காலத்திலேயே காணாமல் போய் விடுகின்றனர். வாய்ப்புகள் கிடைக்காமல் போவது, திரைத்துறையில் இருந்து விலகி வேறு தொழில் செய்வது, நடிகைகள் திருமணத்துக்குப் பின் படங்களில் நடிக்காமல் இருப்பது போன்ற காரணங்களால் பல நல்ல நடிகர், நடிகைகளை திரையுலகம் இழத்துள்ளது. அந்த வரிசையில் ஆட்டோகிராஃப் திரைப்படத்தில் நடித்த மல்லிகாவும் ஒருவர். நல்ல நடிகையாக வலம் வந்த அவர், திருமணத்திற்குப் பின்னர் திரைத்துறையில் இருந்து முற்றிலும் விலகி தற்போது குடும்பத்துடன் கேரளாவில் செட்டில் ஆகிவிட்டார்.
கேரள மாநிலம் திருச்சூரை பூர்வீகமாகக் கொண்டவர் மல்லிகா. இவருடைய இயற்பெயர் ரீஜா வேணுகோபால். 2022 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘நிழல் குத்து’ என்கிற படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார். 2004 ஆம் ஆண்டு இயக்குனர் சேரன் இயக்கிய ‘ஆட்டோகிராஃப்’ திரைப்படம் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் அவர் கமலா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்திற்காக அவருக்கு சிறந்த துணை நடிகைக்கான பிலிம் ஃபேர் விருதும் வழங்கப்பட்டது. இந்த படத்தில் மல்லிகாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. ‘ஆட்டோகிராஃப்’ திரைப்படம் தமிழ் திரையுலகில் ஒரு ட்ரெண்ட் செட்டராகவும், விமர்சன ரீதியாக மாபெரும் வெற்றி பெற்று, நல்ல வசூலையும் குவித்தது.
‘ஆட்டோகிராஃப்’ படத்திற்குப் பின்னர் மல்லிகா விஜய்க்கு தங்கையாக ‘திருப்பாச்சி’ படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மல்லிகாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. ‘திருப்பாச்சி’ படத்தைத் தொடர்ந்து ‘மகா நடிகன்’, ‘குண்டக்க மண்டக்க’, ‘திருப்பதி’, ‘உனக்கும் எனக்கும்’, ‘தோட்டா’, ‘சென்னையில் ஒரு நாள்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழிகளிலும் நடிக்கத் தொடங்கினர் 2012 ஆம் ஆண்டு ‘பியாரி’ என்ற கன்னட படத்திற்காக தேசிய திரைப்பட விருதுகளில் சிறப்பு ஜூரி விருதையும் அவர் வென்றிருந்தார். இந்த நிலையில் 2013 ஆம் ஆண்டு மல்லிகாவுக்கு ஜெகதீஷ் சந்திரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின்னர் அவர் படங்களில் நடிப்பதை முழுமையாக கைவிட்டு விட்டார்.
இவர் கடைசியாக மலையாளத்தில் ‘கதவீடு’ என்கிற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்காக கேரளா அரசின் விருதையும் வென்றுள்ளார். 2013 ஆம் ஆண்டிற்குப் பின்னர் 12 ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் குடும்பத்தை கவனத்து வருகிறார். மல்லிகா-ஜெகதீஷ் தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை மல்லிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். தனது இரண்டாவது குழந்தைக்கு உணவு ஊட்டும் சடங்கை அவர் கோவிலில் வைத்து செய்துள்ளார். இந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் மீண்டும் நடிக்க வருமாறு மல்லிகாவை அழைத்து வருகின்றனர்.
‘ஆட்டோகிராஃப்’ படத்திற்குப் பின்னர் மல்லிகா தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி பல ரசிகர்களை கவர்ந்திருந்தார். கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம் காட்டாதவர். நடிகையாக மட்டும் இல்லாமல் சில காலம் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்தார். நடிகைகள் திரையுலகிலும், வெளி உலகிலும் படும் கஷ்டங்களை முன்வைத்து ‘பழனியிலே கலகம்’ என்ற ஒரு மலையாளப் படத்தை இயக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் இந்த படம் சில காரணங்களால் கைவிடப்பட்டது. வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் ஒரு கலக்கு கலக்கி இருந்தார் மல்லிகா. 2006 முதல் 2008 வரை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அஞ்சலி’ சீரியலிலும், 2008 ஆம் ஆண்டு அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருவிளையாடல்’ சீரியலிலும் மல்லிகா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.