
2002 ஆம் ஆண்டு ‘ரோஜா கூட்டம்’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். தொடர்ந்து பல நல்ல படங்களில் நடித்திருக்கிறார். பின்னாளில் அவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவிலான பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. அவரது சில படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில், அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் அவர் தற்போது போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசில் அவர் அளித்துள்ள வாக்குமூலங்கள் தமிழ் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஒரு படத்தில் நடிக்க சம்பள பாக்கிக்குப் பதிலாக தனக்கு போதைப்பொருள் கொடுக்கப்பட்டதாகவும், அதற்கு அடிமையாகி விட்டதாகவும் ஸ்ரீகாந்த் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
இந்த நிலையில் அவருக்கு ஆரம்பக் கட்டத்தில் பக்க பலமாக இருந்த பத்திரிக்கையாளர் அந்தணன் ஸ்ரீகாந்த் குறித்து பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார். ஸ்ரீகாந்த் குறித்து பேசுங்கள் என்று பலரும் தன்னை தொடர்பு கொண்ட நிலையில் தான் இந்த வீடியோவை வெளியிடுவதாக கூறியுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது, “நான் ஸ்ரீகாந்திடம் பேசி 20 வருடங்களுக்கு மேல் ஆகிறது. ஆரம்பத்தில் அவருக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. அவர் திரைத்துறைக்கு வந்தது தான் மிகப்பெரிய தவறு. 2000 காலக்கட்டத்தில் தோல் வெள்ளையாகும் என்பதற்காக ஆரம்பத்தில் ரூ.1500 விலை கொடுத்து ஒயின் வாங்கி குடித்துக் கொண்டிருந்தார். அதைத்தாண்டி இன்று அவர் இவ்வளவு தூரம் வந்திருக்கிறார் என்றால் பேர் அதிர்ச்சியாக இருக்கிறது. நல்ல நண்பர்கள் பலரும் அன்று அவருடன் இருந்தார்கள். அந்த திருமணத்திற்கு பிறகு அவர்கள் அனைவரும் அவரை விட்டு விலகி விட்டார்கள்.
அவர் தவறான பாதைக்கு செல்லும் போதெல்லாம் அதை தடுத்து நிறுத்தும் நண்பர்கள் அவருடன் இல்லாததே இன்று அவர் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு காரணமாக பார்க்கிறேன். ஏப்ரல் மாதத்தில்’ படம் வெளியான போது ஸ்ரீகாந்த் லேன்சர் கார் ஒன்றை வாங்கினார். அந்த கார் வாங்கிய இரண்டாவது நாளில் தனது நண்பர்களை ஏற்றிக் கொண்டு நள்ளிரவில் வடபழனியில் இருந்து மெரினா பீச் வரை ரேஸ் சென்றார். அப்போது ஒரு நபர் குறுக்கே வர, அவரை இடித்து விடக்கூடாது என்பதற்காக இளையராஜா ஸ்டுடியோ அருகே இருந்த எலக்ட்ரிக்கல் கடை ஷட்டரை உடைத்துக் கொண்டு மறுபுறம் வழியாக வெளியே வந்து, போஸ்ட் கம்பம் ஒன்றின் மீது இடித்து மோதி நிறுத்தினார். அதன் அருகே பிளாட்பாரத்தில் பலர் உறங்கிக் கொண்டிருந்தனர். அந்த போஸ்ட் கம்பம் மற்றும் இல்லை என்றால் அப்போதே எட்டு பேர் மீது காரை ஏற்றி அவர் பெரிய சிக்கலில் சிக்கியிருப்பார். அதேபோல் அவருக்கு மற்றொரு முறை கார் விபத்து ஏற்பட்டு உதட்டில் கிளாஸ் பீஸ் எல்லாம் சொருகி விட்டது தீவிர சிகிச்சைக்கு பின்னர் தான் அவர் மீண்டு வந்தார்.
இந்த சர்ச்சைகளுக்கு பின்னர் வண்ணத்திரை என்ற பத்திரிக்கை ஒன்றில் “ஸ்ரீகாந்த் நடிகை பூமிகாவுடன் காரில் ஏறி எங்கே சென்றார்” என்ற தலைப்புடன் செய்தி வெளியிட்டிருந்தனர். அதைப் பார்த்த ஸ்ரீகாந்த் பெற்றோர்கள் மிகவும் வருத்தப்பட்டனர். ஸ்ரீகாந்தின் தாயார் என்னிடம் வந்து “என்னப்பா இப்படி எல்லாம் மோசமா எழுதுறாங்க” என்று புலம்பினார். அந்த நான்கு வரி கட்டுரையே தாங்கிக் கொள்ள முடியாத அவர் ஸ்ரீகாந்தின் பெற்றோர்கள், இன்று என்ன நிலைமையில் இருப்பார்கள் என்பதை யோசித்தே பார்க்க முடியவில்லை. ஒரு ஆச்சாரமான குடும்பத்திலிருந்து வந்த ஸ்ரீகாந்த் தகாத நண்பருடன் சேர்ந்து செய்த செயல்கள் அவரது குடும்பத்தையும் பெற்றோர்களையும் வெகுவாக பாதித்தது. ஸ்ரீகாந்த் தாயார் அவர் மீது அவ்வளவு உயிரையே வைத்திருப்பார். கோவிலிற்கு ஸ்ரீகாந்த் வரமுடியாத சூழலில், அவரது சட்டையை வைத்துக்கொண்டு கோயிலை 108 முறை வலம் வருவார். அந்த அளவிற்கு ஸ்ரீகாந்த் மீது அவர் பாசம் வைத்திருந்தார்.
ஸ்ரீகாந்தின் தந்தையை சமீபத்தில் திருப்பதியில் சந்திக்க நேர்ந்தது. அப்போது அவர் ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கி இருப்பதாகவும், அங்கே இருந்து பார்த்தால் திருப்பதி கோவில் தெரியும் என்றும், அதனால் இந்த வீட்டை விரும்பி வாங்கியதாகவும் கூறினார். அப்படி ஒரு பக்தி மார்க்கமான குடும்பம் அது அந்த குடும்பத்திற்கு இப்படி ஒரு சோதனை நடந்துள்ளது. திரைப்பிரபலங்கள் வழக்குகளில் மாட்டிக் கொண்டால் அவரைக் காப்பாற்றுவதற்கு இயக்குனர்களோ, நெருங்கிய நண்பர்களோ, தயாரிப்பாளர்களோ சில முயற்சிகளை மேற்கொள்வார்கள். ஆனால் ஸ்ரீகாந்தை காப்பாற்ற யாருமே முன்வரவில்லை. அவர் செய்த தவறுக்கு இந்த தண்டனை தேவை தான் அனுபவிக்கட்டும் என்று விட்டுவிட்டனர்” என அந்த வீடியோவில் அந்தணன் கூறியுள்ளார்.