“இருட்டு அறையில் முரட்டு குத்து” என்ற ஆபாச படத்தை எடுத்த இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார், அதன் இரண்டாம் பாகமாக இரண்டாம் குத்து என்ற படத்தை இயக்கியுள்ளார். அதில் அவரே ஹீரோவாக நடித்துள்ளார்.
ஏற்கனவே வாயை திறந்து சொல்ல முடியாத அளவிற்கு ஆபாசமாகவும், கேவலமாகவும் படத்திற்கு பெயர் வைத்துள்ளதாக கண்டனங்கள் குவிந்த நிலையில், வாழை பழத்தை வைத்து படக்குழு வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடும் கண்டனங்களை உருவாக்கியது.
டீசர், போஸ்டரிலேயே இவ்வளவு ஆபாசம் என்றால் படம் எப்படி இருக்குமோ? என்பதால் படத்தை தடை செய்ய வேண்டுமென கோரிக்கைகள் எழுந்தது.
இது எல்லாம் போதாது என்று இரண்டாம் குத்து பட போஸ்டரைக் கண்டித்த இயக்குநர் பாரதிராஜாவை கிண்டலாக விமர்சித்து சந்தோஷ் ஜெயக்குமார் ட்வீட் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு திரைத்துறையினர் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்ததோடு மட்டுமல்லாது, இப்படிப்பட்ட ஆபாச படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கைகள் வைத்தனர். மேலும் இரண்டாம் குத்து பட இயக்குநர், நடிகர்களை கைது செய்ய வேண்டும் என்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் புகார்கள் குவிந்தது.
இதனால் மிரண்டு போன சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்குநர் பாரதிராஜாவிடம் மன்னிப்பு கேட்டதோடு மட்டுமல்லாமல், இதுபோன்று ஆபாச போஸ்டர்களை இனி பதிவிடமாட்டோம் என்றும், அடுத்த முறை அனைவரும் பார்க்கும் படியான போஸ்டரை வெளியிடுவோம் என்றும் கூறியிருந்தனர்.
இந்நிலையில் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் போட்டோவை வெளியிட்டு பிரச்சனையை தூண்டியிருக்கிறார். விஜயதசமி வாழ்த்தோடு, ஆபாச படங்களுக்கு அவல் பொரி, பூ, பழம் வைத்து பூஜை செய்வது போன்ற போட்டோவை பதிவிட்டுள்ளார். இந்துக்களின் புனித பண்டிக்கையான விஜயதசமியை அவமதிக்கும் விதமாக இரண்டாம் குத்து பட நடிகர்கள் செய்த இந்த காரியத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.