தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக கடந்த 14ம் தேதி பிரதமர் மோடி சென்னை வந்தார். பிரதமர் மோடியின் தமிழக வருகையின் போது #Gobackmodi என்ற ஹேஷ்டேக்கையும், பாஜகவினர் #TNWelcomesModi என்ற ஹேஷ்டேக்கையும் மாற்றி மாற்றி ட்ரெண்ட் செய்கின்றனர்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமான பிக்பாஸ் ஓவியா பிரதமர் மோடிக்கு எதிராக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் #Gobackmodi என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தியது கடும் விமர்சனங்களை உருவாக்கியது.
ஓவியாவின் இந்த ட்வீட் குறித்து பாஜகவின் வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் என்பவர் சிபிஐசிஐடி அலுவலகத்தின் சைபர் பிரிவிற்கு புகார் அளித்தார். பிரதமர் வருகை குறித்துக் குறிப்பிட்டு, பிரதமரின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் விதத்தில், சமூகத்தில் பதற்றம் ஏற்படுத்தும் விதத்தில் நடிகை ஓவியா 'கோ பேக் மோடி' எனப் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவரிடம் உரிய விசாரணை நடத்தி, ஓவியா மீது 124 (எ) (தேசதுரோக வழக்கு), 153 (இரு சமூகங்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்துதல்), 294 (அவதூறு) 69 (எ) ஐடி பிரிவு சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் பதிவு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு முன்னதாகவே திமுக வேண்டுமென்றே திட்டமிட்டு ஓவியாவிற்கு பணம் கொடுத்து இப்படி ட்வீட் செய்ய வைத்ததாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் ஓவியா வர உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாத ஓவியா தற்போது அரசியலுக்குள் நுழைய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திமுக பேச்சாளராக ஓவியாவை நியமித்துள்ள ஐபேக் நிறுவனம், அதற்காக அவருக்கு ஒரு கோடி ரூபாய் பணம் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.