வசீகரமான அழகும், அசத்தலான நடிப்பும் இருந்தாலும் முதல் படத்தோடு காணாமல் போன ஹீரோயின்களின் பட்டியல் மிக நீளம். அப்படியிருக்க வெகு சில நடிகைகள் மட்டுமே முதல் படத்தில் கிடைத்த வெற்றியை தக்க வைத்துக் கொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிடுகின்றனர்.
கடந்த பிப்ரவரி மாதம் தெலுங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு பெற்ற திரைப்படம் ‘உப்பெனா’. இந்த படத்தை அறிமுகங்களை கலவை என குறிப்பிடலாம். காரணம் இயக்குநர் பிச்சி பாபு சனா, ஹீரோ வைஷ்ணவ் தேஜ், ஹீரோயின் கீர்த்தி ஷெட்டி என அனைவருக்குமே இது முதல் படம்.
இதில் கீர்த்தி ஷெட்டியின் தந்தையாகவும், சாதிவெறி பிடித்த பெரிய மனிதனாகவும் விஜய்சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பார். ரொமான்ஸ் காட்சிகளில் வைஷ்ணவ் தேஜ், கீர்த்தி ஷெட்டியின் நடிப்பு ரசிகர்களை ஈர்த்தது.
முதல் படத்திலேயே தன்னுடைய அழகால் கீர்த்தி ஷெட்டி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார்.சோசியல் மீடியா ட்ரெண்டிங்காக மாறிய கீர்த்தி ஷெட்டிக்கு தற்போது தெலுங்கில் அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. பக்கத்து வீட்டில் பெண் போன்ற உணர்வும், அந்த அழகிய சிரிப்பும் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளது.
லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிக்கும் ஒரு படம், நானி நடிக்கும் ‘ஷ்யாம் சிங்கா ராய்’ மற்றும் சுதீர் பாபு நடிக்கும் ஒரு படம் என மூன்று படங்களில் கீர்த்தி ஒப்பந்தமாகியுள்ளார். இது இல்லாமல் தமிழிலும் அவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் முதல் படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானதை அறிந்து கொண்ட நடிகை அடுத்தடுத்து கமிட்டான படங்களுக்கு ரூ.2 கோடி வரை சம்பளம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தெலுங்கு திரையுலகில் தீயாய் பரவி வருகிறது.