நடிகை கீர்த்தி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக மாறியவர். இவருடைய தந்தை சுரேஷ் ஒரு தயாரிப்பாளர் என்பதால், இவருக்கு சினிமா வாய்ப்பு மிக எளிதாகவே கிடைத்தது.
பட வாய்ப்பு எளிதாக கிடைத்து விட்டாலும், பல்வேறு விமர்சனங்களுக்கு பிறகே ரசிகர்கள் மனதில் முன்னணி நாயகி என்கிற இடத்தை பிடித்தார் கீர்த்தி சுரேஷ்.
தமிழில் 'இது என்ன மாயம்' படத்தில் விக்ரம் பிரபுவுக்கு (Vikram Prabhu) ஜோடியாக அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். இந்த படம் தோல்வியைசந்தித்தாலும் , இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு (Sivakarthikeyan) ஜோடியாக இவர் நடித்த, 'ரஜினிமுருகன்' மற்றும் 'ரெமோ' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றது.
அதே நேரம் கீர்த்தி சுரேஷின் தனித்துவமான நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வந்த திரைப்படம் என்றால், அது 'மகாநடி' திரைப்படம் தான். இந்த படத்தில் அச்சு அசல், நடிகையர் திலகம் சாவித்திரியாகவே (Savithiri) வாழ்ந்து நடித்திருந்தார் என்று கூறும் அளவிற்கு விமர்சனங்கள் கிடைத்தது.
இந்த படத்திற்காக, கீர்த்தி சுரேஷ் தேசிய விருதையும் வென்றார். பின்னர் தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கிய இவர், தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
கீர்த்தி சுரேஷ் 'வாஷி' என்கிற பெயரில் தனது சொந்த பேனரில் ஒரு திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் தயாரிப்பு மேற்பார்வையை அவரது சகோதரி ரேவதி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கீர்த்தி சுரேஷ் தயாரிக்கும் முதல் படத்தில், பிரபல மலையாளநடிகரும், 'மாரி 2' படத்தில் முரட்டு வில்லனாக நடித்த டொவினோ தாமஸ் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்டுடுகிறது.
இந்த படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் கோபாலகிருஷ்ணனின் மகன் விஷ்ணு என்பவர் இயக்க உள்ளாராம். இந்த மாதத்திலேயே இப்படத்தின் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளதாகவும், இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது