தமிழ் சினிமாவில், வாரிசு நடிகர் என்கிற அடையாளத்தோடு 'மன்மத லீலை' படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகர் ராதா ரவி. 500 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும் சீரியல்களிலும் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர். திரையுலகை தாண்டி அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவருக்கு முதல் தாய் வீடு என்றால் திமுக கட்சி தான்.
அதன் பின், ஒரு சில காரணங்களால் அந்த கட்சியில் இருந்து விலகி, அதிமுக கட்சியில் இணைந்து, சைதப்பேட்டை சட்ட மன்ற உறுப்பினராக பதவி வகித்தார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின், ஆளும்கட்சியில் ஏற்பட்ட சில மாற்றங்களால் மீண்டும் அக்கட்சியில் இருந்து விலகி, திமுக கட்சியில் இணைந்து அரசியல் பணிகளை மேற்கொண்டார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், நடிகை நயன்தாரா நடித்த 'கொலையுதிர் காலம்' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்தில் இவர் பேசியது மிக பெரிய பிரச்சனையாக வெடித்தது. இதனால் அந்த கட்சியில் இருந்து, இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் ஜெ.பி நட்டா முன்னிலையில் கடந்த 2019-ம் ஆண்டு பாஜக-வில் சேர்ந்த ராதாரவி, தற்போது வரை அந்த கட்சியில் நீடித்து வருகிறார்.
இதுதவிர டப்பிங் யூனியன் சங்க தலைவராகவும் ராதாரவி இருந்து வருகிறார். இவர் டப்பிங் யூனியனில் பல விதங்களில் ஊழல் செய்திருப்பதாக அதன் உறுப்பினர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தனர். இதையடுத்து இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி 47 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில் நடிகர் ராதாரவி தலைமையிலான டப்பிங் சங்கத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பது நிரூபணமாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவின் படி நடந்த விசாரணையில், முறைகேடு நடந்திருப்பதை உறுதி செய்து, நடிகர் ராதாரவி நிர்வாகத்திற்கு எதிராக தொழிலாளர் நலத்துறை கடுமையான தீர்ப்பு வழங்கியுள்ளது.