தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யா, கடந்த 2009-ம் ஆண்டு வெளியான ஜோஷ் என்கிற தெலுங்கு படம் மூலம் டோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார். இதையடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பு மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது. இப்படத்தின் மூலம் தான் நடிகர் நாக சைதன்யாவுக்கும், நடிகை சமந்தாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இதையடுத்து இவர்கள் இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பின்னரும் இருவரும் தொடர்ந்து படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வந்தனர். 4 ஆண்டுகள் மட்டுமே நீடித்த இவர்களது திருமண உறவு கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவுக்கு வந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.
விவாகரத்துக்கு பின்னர் நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா இருவருமே சினிமாவில் முழு கவனம் செலுத்த தொடங்கி உள்ளனர். குறிப்பாக சமந்தாவின் கெரியர் விவாகரத்துக்கு பின்னர் அசுர வளர்ச்சியை கண்டுள்ளது. இவர்கள் இருவரும் மீண்டும் இணைய இருப்பதாக சில வதந்திகள் பரவி வந்த போதும், அதனை இருவரும் திட்டவட்டமாக மறுத்தனர்.