தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பெயருக்கும் புகழுக்கும் சொந்தக்காரர்கள் விஜயகுமார் - மஞ்சுளா ஜோடி. இவர்களுடைய மொத்த குடும்பமும் கலைக்குடும்பம் தான்.மகன் அருண் விஜய், மகள்கள் வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர் திரையுலகில் அசத்தியுள்ளனர்.
விஜயகுமாரின் மகனான அருண் விஜய், அப்பாவின் அடையாளத்தை பெரிதாக பயன்படுத்தாமல் தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்திறமையால் முன்னுக்கு வந்துள்ளார். வெற்றி, தோல்விகள் அடுத்தடுத்து வந்த போதும் கடினமாக உழைத்து வருகிறார்.
அப்பா, தாத்தாவின் பெயரைக் காப்பாற்றும் விதமாக அருண் விஜய்யின் மகனான அர்னவ் விஜய் விரைவில் திரையில் மிளிர உள்ளார். குழந்தைகளை மையமாக வைத்து நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் படத்தில் அர்னவ் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக உள்ளார்.
இதற்கான பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. தாத்தா விஜயகுமார், அப்பா அருண் விஜய் ஆகியோருடன் குட்டி நாயகன் அர்னவ் பங்கேற்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.
"மூன்று தலைமுறை நடிகர்கள் !!! அர்னவ் தனது அறிமுகத்தில் எனது அப்பாவுடன் திரையைப் பகிர்ந்து கொள்ள ஆசீர்வதிக்கப்பட்டவர். இது நம்பமுடியாத மற்றும் மறக்கமுடியாத அனுபவமாக இருக்கிறது!” என தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
அழகான சிரிப்புடன் தாத்தா, அப்பா, மகன் என மூன்று தலைமுறை நடிகர்களும் ஒரே தருணத்தில் இணைந்துள்ள இந்த க்யூட் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.