சினிமாவில் எந்தவித பின்புலமும் இல்லாமல் அறிமுகமாகி தன் விடா முயற்சியால் பல்வேறு விஸ்வரூப வெற்றிப்படங்களைக் கொடுத்து இன்று கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் அஜித். அவர் இதுவரை 60 படங்களில் நடித்துள்ளார். விரைவில் அவரின் 61-வது படமான ஏகே 61 ரிலீசாக உள்ளது. இந்நிலையில், நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடித்த படங்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
வாலி
நடிகர் அஜித் முதன்முதலில் இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் வாலி. கடந்த 1999-ம் ஆண்டு ரிலீசான இப்படத்தில் நடிகர் அஜித், இரட்டை சகோதரராக நடித்திருப்பார். அதில் ஒருவர் ஹீரோ மற்றொருவர் வில்லன் என வித்தியாசமாக எடுக்கப்பட்டிருந்த இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று அஜித்தின் கெரியரில் முக்கியமான படமாக அமைந்திருந்தது. இப்படத்தின் மூலம் தான் எஸ்.ஜே.சூர்யா இயக்குனராக அறிமுகமானார்.
சிட்டிசன்
சரவண சுப்பையா இயக்கத்தில் கடந்த 2001-ம் ஆண்டு ரிலீசான படம் சிட்டிசன். இதிலும் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். அப்பாவி மீனவனாக ஒரு கேரக்டரில், அநியாயங்களை தட்டிக் கேட்பவராக இன்னொரு கேரக்டரிலும் நடித்து அசத்தி இருப்பார். இப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி அஜித்தின் நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தியது.
அட்டகாசம்
சரண் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்த படம் அட்டகாசம். கடந்த 2004-ம் ஆண்டு ரிலீசான இப்படத்தில் நடிகர் அஜித் கேங்ஸ்டராகவும், டிரைவிங் ஸ்கூல் நடத்தும் இளைஞராகவும் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இதில் கேங்ஸ்டர் வேடத்தில் நடித்த அஜித்தை தல என்று அவரது கூட்டாளிகள் அழைப்பார்கள். அதேபோல் இப்படத்தில் இடம்பெறும் தல போல வருமா பாடலும் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது.
வரலாறு
அஜித் - கே.எஸ்.ரவிக்குமார் இரண்டாவது முறையாக இணைந்த படம் வரலாறு. முதலில் காட்ஃபாதர் என பெயரிடப்பட்ட இப்படம் பின்னர் வரலாறு என தலைப்பு மாற்றப்பட்டு ரிலீசானது. இதில் ஷிவ ஷங்கர், விஷ்ணு, ஜீவா என மூன்று ரோல்களில் நடித்திருப்பார் அஜித். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார்.
பில்லா
நடிகர் அஜித்தை ஸ்டைலிஷ் ஹீரோவாக மாற்றிய படம் என்றால் அது பில்லா தான். ரஜினி நடித்த பில்லா படத்தைவிட இதற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. அதற்கு காரணம் அஜித்தின் நடிப்பு தான். இதில் டேவிட் பில்லா மற்றும் வேணு சரவணன் என இரண்டு வேடங்களிலும் நேர்த்தியாக நடித்து அசத்தி இருப்பார் அஜித். இப்படத்தை விஷ்ணு வர்தன் இயக்கினார்.