கன்னட திரையுலகின் பவர் ஸ்டாரான புனித் ராஜ்குமார் நேற்றைய தினம் வழக்கம் போல் தன்னுடைய வீட்டில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த போது, நெஞ்சுவலி காரணமாக கிழே சுருண்டு விழுந்தார்.
இதை தொடர்ந்து, மிகவும் ஆபத்தான நிலைமையில் பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அந்த நிலையில், நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி காலமானார். புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு அவரது குடும்பத்தினர், திரைத்துறையினர் மற்றும் சினிமா ரசிகர்களை மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மேலும் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை கேள்விப்பட்டு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மருத்துவமனை முன்பு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. இதற்கிடையே பேங்களூரில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகளை உடனே மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பெங்களூரு கண்டிர்வா மைதனாத்தில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள புனீத் ராஜ்குமாரின் உடலுக்கு விடிய விடிய ரசிகர்கள் நேரில் அஞ்சலி வருகின்றனர். மைதானத்தின் வெளியே 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மக்கள் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள்.
இந்நிலையில் இவரது மரண செய்தியை கேள்வி பட்டு அடுத்தடுத்து மூன்று ரசிகர்கள் உயிரிழந்த சம்பவம் வெளியாகி மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புனித் ராஜ்குமாரின் தீவிர ரசிகரான 30 வயதே ஆகும் கர்நாடகாவை சேர்ந்த, முனியப்பன் என்பவர், இவரது மரண செய்தியை கேட்ட துக்கத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
அதே போல், பெலகாவியில் உள்ள ஷிண்டோல்லி கிராமத்தை சேர்ந்த, புனீத் ராஜ்குமாரின் ரசிகர் ஒருவர்... தொலைக்காட்சி பெட்டியின் முன் அமர்ந்து, அழுது கொண்டே இருக்கும் போது, மாரடைப்பு ஏற்பட்டு கீழே சரிந்துள்ளார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இருவரை தொடர்ந்து, நடிகர் புனித் ராஜ்குமாரின் மற்றொரு ரசிகரான 21 வயதே ஆகும் ராகுல் புனித் ராஜ்குமார் படத்திற்கு தனது வீட்டில் மரியாதை செலுத்திய பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார். இந்த சம்பவம் கன்னட திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.