
உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் கொள்கைகள் பெருகிவிட்ட போதிலும், தமிழ்நாட்டு இளைஞர்களிடையே அரசு வேலை மீதான மோகம் எள்ளளவும் குறையவில்லை. குறிப்பாக 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது டிஎன்பிஎஸ்சி (TNPSC) தேர்வை எழுதிவிடத் துடிக்கின்றனர். தனியார் நிறுவனங்களில் கைநிறைய சம்பளம் வாங்குபவர்கள் கூட, பணிப் பாதுகாப்பு (Job Security) கருதி அரசுத் தேர்வுகளை நாடி வருவது வழக்கமாகிவிட்டது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் குரூப் 1, குரூப் 2 மற்றும் குரூப் 4 பணிகளுக்காகத் தோராயமாக 15,000 காலியிடங்களை நிரப்பி வருகிறது. சாதி, மத பேதமின்றி திறமை அடிப்படையில் (Merit Based) மட்டுமே பணி வழங்கப்படுவதால், சமூகத்தில் இதுவரை அதிகாரம் கிடைக்கப்பெறாத விளிம்புநிலை மக்களும், முதல் தலைமுறை பட்டதாரிகளும் அதிக அளவில் விண்ணப்பிக்கின்றனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் போட்டி கடுமையாகி வருகிறது.
அரசுப் பணிக்கான இந்தத் தீவிரப் போட்டி, சமூகத்தில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தேர்வில் வெற்றி பெறுவதற்காக, இளைஞர்கள் சராசரியாக 5 முதல் 6 ஆண்டுகள் வரை வேறு எந்த வேலைக்கும் செல்லாமல் முழுநேரமாகப் படிக்க வேண்டியுள்ளது. இது தேர்வர்களுக்குக் கடுமையான மன உளைச்சலையும், குடும்பத்திற்குப் பொருளாதாரச் சுமையையும் உருவாக்குகிறது.
தேர்வர்களின் இந்த மன அழுத்தத்தைக் குறைக்கவும், அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டுப் படிக்கவும் டிஎன்பிஎஸ்சி ஆணையம் 'ஆண்டு செயல்திட்டத்தை' வெளியிடுகிறது. வரவிருக்கும் ஆண்டில் என்னென்ன தேர்வுகள் நடைபெறும், அதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும், தேர்வுத் தேதி என்ன போன்ற உத்தேசத் தகவல்களை இது முன்கூட்டியே தெரிவித்துவிடும்.
இந்நிலையில், 2026-ம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி ஆனுவல் பிளானர் மிக விரைவில் வெளியிடப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அட்டவணையில் குரூப் 1, குரூப் 2/2A மற்றும் லட்சக்கணக்கானோர் ஆவலுடன் எதிர்பார்க்கும் குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்புகள் இடம்பெறும். மேலும், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைத் தேர்வுகளுக்கான (Combined Technical Services) அறிவிப்புகளும் இதில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமாக சில ஆண்டுகள் இடைவெளிவிட்டு வரும் குரூப் 4 தேர்வு அறிவிப்புகள், கடந்த 2018 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில், குறிப்பாக 2024 மற்றும் 2025 ஆண்டுகளில் அடுத்தடுத்து வெளியானது. இது கடந்த 8 ஆண்டுகளில் நடக்காத அதிசயமாகும். 2025-ல் காலியிடங்கள் குறைவாக இருந்த நிலையில், 2026-ம் ஆண்டும் குரூப் 4 அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அரசு வேலை கனவோடு காத்திருக்கும் தேர்வர்கள், ஆனுவல் பிளானரை எதிர்பார்த்து இப்போதே தங்கள் தயாரிப்பைத் தொடங்குவது புத்திசாலித்தனம்.