தமிழகக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான பொதுப் பாடத்திட்டம் திரும்பப் பெறப்பட வாய்ப்புள்ளது. இந்த முடிவிற்கான காரணங்களையும், அதன் விளைவுகளையும் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழக உயர் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து அரசு மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளுக்கும் 2023-ல் ஒரு பொதுப் பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதில், 301 இளங்கலை (UG) மற்றும் 135 முதுகலை (PG) படிப்புகளுக்கான பாடத்திட்டத்தை TANSCHE (தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம்) வெளியிட்டது. இதன் மூலம், அனைத்துக் கல்லூரிகளிலும் 75% பாடத்திட்டம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்றும், மீதமுள்ள 25% பாடத்திட்டத்தை கல்லூரிகளே முடிவு செய்துகொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்புக்கு தன்னாட்சிக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
24
எதிர்ப்புக்கு காரணம் என்ன?
பொதுப் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகள் தங்களது பாடத்திட்டங்களை நவீனப்படுத்தவும், புதிய கண்டுபிடிப்புகளை சேர்க்கவும் முடியாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக, அறிவியல் படிப்புகளுக்கு புதிய உபகரணங்கள் மற்றும் ஆய்வக சோதனைகளை இணைக்க பொதுப் பாடத்திட்டம் தடையாக இருப்பதாக பேராசிரியர்கள் தெரிவித்தனர். மேலும், மாணவர்கள் தொழில்முறைச் சந்தைக்கு தயாராகும் வகையில், செயல்திறன் சார்ந்த (Practical) கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
34
ஆய்வகத் தேர்வுகள் குறித்து சர்ச்சை
பொதுப் பாடத்திட்டத்தின் கீழ், அனைத்து ஆய்வகத் தேர்வுகளையும் ஒரே ஒரு தேர்வாகக் கல்லூரிகள் நடத்த வேண்டும் என TANSCHE கூறியது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கல்லூரிகள், ஒவ்வொரு பருவத் தேர்வு (semester) முடிவிலும் ஆய்வக சோதனைகள் நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தன. இந்த கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலித்து வருவதாகவும், ஆய்வுக்கூடங்களை மேம்படுத்த 20 லட்சம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கத் தயாராக இருப்பதாகவும் உயர்கல்வித் துறை செயலர் பி.சங்கர் தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய TANSCHE துணைத் தலைவர் எம்.பி.விஜயகுமார், "பாடத்திட்டத்தை மாற்றுவதற்கான கோரிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகிறோம். விரைவில் இதுதொடர்பாக ஒரு முக்கிய முடிவு எடுக்கப்படும்" என்று தெரிவித்தார். தன்னாட்சிக் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் தாங்கள் ஏன் பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும், அதற்குத் தேவைப்படும் நிதி உதவி, மற்றும் புதிய பாடத்திட்டம் குறித்த தங்கள் கருத்துகளை முன்வைக்குமாறு TANSCHE கோரிக்கை விடுத்துள்ளது. இந்த புதிய முடிவு, தமிழக உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்தும் எனப் பலரும் எதிர்பார்க்கின்றனர்.