வெளிநாட்டு வேலைக்கு செல்ல ஆசையா? பாஸ்போர்ட் எடுக்கும் முன் இந்த விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க - தமிழக அரசு எச்சரிக்கை!

Published : Dec 22, 2025, 09:31 PM IST

Work Abroad வெளிநாட்டு வேலைக்குச் செல்பவர்களுக்கான தமிழக அரசின் வழிகாட்டுதல்கள். போலி ஏஜெண்டுகள், சுற்றுலா விசா மோசடி குறித்து எச்சரிக்கை. உதவி எண்கள் உள்ளே.

PREV
14
Work Abroad வெளிநாட்டு வேலை கனவும் நிதர்சனமும்

சிறந்த எதிர்காலத்திற்காக வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்பும் தமிழர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், சரியான வழிகாட்டுதல் இல்லாததால் பலர் போலி ஏஜெண்டுகளிடம் சிக்கித் தவிக்கின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு, அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம், வெளிநாடு செல்பவர்களுக்கான முக்கியமான 'செய்ய வேண்டியவை' மற்றும் 'செய்யக்கூடாதவை' பட்டியலை வெளியிட்டுள்ளது.

24
சரியான முறையில் செல்வது எப்படி?

வெளிநாட்டு வேலைக்குச் செல்பவர்கள் எப்போதும் 'eMigrate' வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு முகவர்கள் மூலமாக மட்டுமே செல்ல வேண்டும். நீங்கள் பணிபுரியப் போகும் நிறுவனம் மற்றும் முதலாளி குறித்த முழு விவரங்களையும் முன்கூட்டியே தெரிந்து கொள்வது அவசியம். வேலைக்கான முறையான ஒப்பந்தம் (Contract), விசா மற்றும் சட்டப்படியான ஆவணங்கள் கையில் இருந்தால் மட்டுமே பயணம் மேற்கொள்ள வேண்டும்.

ஒப்பந்தத்தின் அவசியம் என்ன?

வேலைக்கான ஒப்பந்தத்தை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பளம், வேலை நேரம் மற்றும் உரிமைகள் மட்டுமே உங்களுக்கு வெளிநாட்டில் வழங்கப்படும். வாய்மொழி வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம். மேலும், அந்த நாட்டின் சட்ட திட்டங்கள் மற்றும் கலாச்சாரத்தை மதித்து நடக்க வேண்டும். அங்கிருந்து நாடு திரும்ப 'Exit Permit' அவசியம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

34
சுற்றுலா விசாவில் செல்லலாமா?

கண்டிப்பாகக் கூடாது. சுற்றுலா விசாவில் (Tourist Visa) சென்று வேலை செய்வது சட்டவிரோதமாகும். அவ்வாறு செய்தால், வெளிநாடுகளில் கடுமையான தண்டனை அல்லது சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும். மேலும், போலி முகவர்கள் மூலம் சுற்றுலா விசாவில் சென்று விசா காலம் முடிந்த பின் தங்கினால், பெரும் அபராதம் செலுத்த நேரிடும்.

தடை செய்யப்பட்ட பொருட்கள்

வெளிநாடு செல்லும்போது மது வகைகள், போதைப்பொருட்கள் மற்றும் மதச் சின்னங்களைக் கொண்டு செல்லக்கூடாது. குறிப்பாக, போதைப்பொருட்கள், ஆபாசக் காட்சிகள் வைத்திருத்தல், திருட்டு போன்றவற்றில் ஈடுபட்டால், சில நாடுகளில் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை கூட கிடைக்க வாய்ப்புள்ளது.

44
போலி ஏஜெண்டுகளின் பிடியில் சிக்கினால்...

பதிவு செய்யாத போலி ஏஜெண்டுகளை நம்பிச் சென்றால் பாலைவனத்தில் ஆடு, ஒட்டகம் மேய்க்கக் கட்டாயப்படுத்தப்படலாம். அல்லது 40 முதல் 50 அறைகள் கொண்ட பெரிய வீடுகளில் ஓய்வின்றி வீட்டு வேலை செய்யவும், கழிவறை சுத்தம் செய்யவும் வற்புறுத்தப்படுவார்கள். பாஸ்போர்ட்டைப் பறித்துக்கொண்டு, சம்பளம் தராமல் கொத்தடிமைகளாக நடத்தும் அபாயமும் உள்ளது. சில நேரங்களில் பெண்கள் பாலியல் தொந்தரவுக்கும் ஆளாக நேரிடலாம்.

அவசர உதவிக்கு யாரை அழைக்க வேண்டும்?

வெளிநாட்டு வேலை குறித்த சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்குத் தமிழ்நாடு அரசின் 24 மணி நேர கட்டணமில்லா உதவி மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்:

• இந்தியாவிற்குள்: 1800 309 3793

• வெளிநாடுகளிலிருந்து: 0 80 6900 9900

• மிஸ்டு கால் (Missed Call): 0 80 6900 9901

• இணையதளம்: https://nrtamils.tn.gov.in/

Read more Photos on
click me!

Recommended Stories