தமிழகக் காவல்துறையில் காலியாக உள்ள தாலுகா, ஆயுதப்படை மற்றும் சிறப்பு காவல் பிரிவுகளில் 1,299 உதவி ஆய்வாளர் (Sub-Inspector) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதற்காக சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) நடத்திய இந்தத் தேர்வு, மாநிலம் முழுவதும் 46 மையங்களில் நடைபெற்றது. இதில் சுமார் 1 லட்சத்து 78 ஆயிரம் தேர்வர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தேர்வெழுதினர்.
25
ஏமாற்றம் அளித்த முதன்மைத் தேர்வு
தமிழ் தகுதித் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக இந்தத் தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிந்து வெளியே வந்த தேர்வர்கள், "தமிழ் தகுதித் தேர்வு சற்று எளிமையாகவே இருந்தது. ஆனால், முதன்மைத் தேர்வு (Main Exam) கடந்த ஆண்டை ஒப்பிடும்போது மிகவும் கடினமாக இருந்தது" என்று கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக, முதன்மைத் தேர்வில் உளவியல் (sychology) பகுதியில் வழக்கமாக இடம்பெறும் கேள்விகள் குறித்த சர்ச்சை எழுந்துள்ளது.
35
மாயமான 10 தமிழ் கேள்விகள்
வழக்கமாக எஸ்.ஐ தேர்வுக்கான உளவியல் பகுதியில் 60 கேள்விகள் கேட்கப்படும். அதில் கட்டாயமாக 10 கேள்விகள் தமிழ் மொழி தொடர்பானதாக இருக்கும். ஆனால், இம்முறை அந்த 10 தமிழ் கேள்விகள் கேட்கப்படவில்லை என்பது தேர்வர்களுக்குப் பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது. உளவியல் பகுதியில் தமிழ் கேள்விகளை எதிர்பார்த்துச் சென்றவர்களுக்கு இது சவாலாக அமைந்தது.
பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள் மற்றும் வரலாறு தொடர்பான கேள்விகள் எளிமையாகத் தெரிந்தாலும், அதற்கான விடைகளைக் கண்டறிய அதிக நேரம் தேவைப்பட்டதாகத் தேர்வர்கள் புலம்பினர். பல கேள்விகள் யோசித்து விடை அளிக்கும் வகையில் இருந்ததால், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் தேர்வை முடிப்பது கடினமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பலருக்குத் தெரிந்த கேள்விகளுக்குக் கூட விடை அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
55
அடுத்த கட்டத்திற்குத் தயராகுங்கள்!
எழுத்துத் தேர்வு முடிவடைந்த நிலையில், அடுத்ததாக நடைபெறவுள்ள உடற்தகுதித் தேர்வில் (Physical Efficiency Test) வெற்றி பெறுவதே தேர்வர்களின் அடுத்த இலக்காகும். கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் மற்றும் ஓட்டம் ஆகியவற்றிற்கு இப்போதிருந்தே உடலைத் தயார்படுத்துவது நல்லது. விடாமுயற்சியுடன் பயிற்சி செய்தால் மட்டுமே காக்கிச் சட்டை கனவை நனவாக்க முடியும் என்று அனுபவமிக்க தேர்வர்கள் அறிவுறுத்துகின்றனர்.