
மத்திய அரசின் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர விரும்பும் லட்சக்கணக்கான தேர்வர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), அடுத்தகட்ட மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (CTET - Feb 2026) விண்ணப்ப செயல்முறையை விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கான முழுமையான வழிகாட்டுதல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
CTET தேர்வு ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் நடைபெறலாம். இத்தேர்வு இரண்டு தாள்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
• முதல் தாள் (Paper I): 1 முதல் 5-ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கானது.
• இரண்டாம் தாள் (Paper II): 6 முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கானது.
மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு கொள்குறி வகை வினாக்கள் (MCQ) கேட்கப்படும். தேர்வர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி என்னவென்றால், இதில் எதிர்மறை மதிப்பெண்கள் (Negative Marking) கிடையாது.
• முதல் தாள் (வகுப்பு 1-5): விண்ணப்பதாரர்கள் மேனிலைக்கல்வி (+2) முடித்திருப்பதோடு, தொடக்கக் கல்வியில் இரண்டு ஆண்டு டிப்ளமோ (D.El.Ed) முடித்திருக்க வேண்டும் அல்லது இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்க வேண்டும்.
• இரண்டாம் தாள் (வகுப்பு 6-8): விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் (Degree) பெற்றிருப்பதோடு, B.Ed முடித்திருக்க வேண்டும். அல்லது 4 ஆண்டு ஒருங்கிணைந்த B.A.Ed/B.Sc.Ed படிப்பை முடித்திருக்க வேண்டும்.
CTET தேர்வெழுதுவதற்கு குறைந்தபட்ச வயது 18 ஆகும். ஆனால், இந்தத் தேர்வில் பங்கேற்பதற்கெனத் தனிப்பட்ட உச்ச வயது வரம்பு (Upper Age Limit) எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. தகுதியுள்ள யார் வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் இத்தேர்வை எழுதலாம்.
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்த வேண்டும்.
• பொது மற்றும் OBC பிரிவினர்: ஒரு தாளுக்கு ரூ.1,000 | இரண்டு தாள்களுக்கும் சேர்த்து ரூ.1,200.
• SC, ST மற்றும் மாற்றுத்திறனாளிகள்: ஒரு தாளுக்கு ரூ.500 | இரண்டு தாள்களுக்கும் சேர்த்து ரூ.600.
படிக்க வேண்டிய பாடங்கள் (Syllabus)
• தாள் 1: குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் (Child Development and Pedagogy), மொழி-1, மொழி-2, கணிதம் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகள்.
• தாள் 2: குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல், மொழி-1, மொழி-2, கணிதம் மற்றும் அறிவியல் (அல்லது) சமூக அறிவியல்.
1. முதலில் ctet.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
2. முகப்புப் பக்கத்தில் வரவுள்ள "Apply for CTET Feb 2026" என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
3. புதிய பதிவை (New Registration) முடித்து, தனிப்பட்ட மற்றும் கல்வி விவரங்களைப் பிழையின்றிப் பூர்த்தி செய்யவும்.
4. தேர்வு மையம், மொழி மற்றும் தாள் விவரங்களைத் தேர்வு செய்யவும்.
5. பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றவும்.
6. கட்டணத்தைச் செலுத்தி, விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் (Print out) செய்து வைத்துக்கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும் உடனடியாக விண்ணப்பித்துத் தேர்வுக்குத் தயாராகுங்கள்!