
நாடு முழுவதும் உள்ள ஐஐஎம் (IIM) மற்றும் பிற முன்னணி வணிகவியல் கல்லூரிகளில் எம்பிஏ (MBA) போன்ற முதுகலை படிப்புகளில் சேர்வதற்கான பொது நுழைவுத் தேர்வு (CAT 2025) நாளை (நவம்பர் 30, ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. ஐஐஎம் கோழிக்கோடு (IIM Kozhikode) நடத்தும் இந்தத் தேர்வில் பங்கேற்கவிருக்கும் மாணவர்கள் கடைசி நேரத்தில் பதற்றத்தைத் தவிர்க்க, தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விதிமுறைகள் மற்றும் 'டிரெஸ் கோட்' (Dress Code) பற்றிய முழு விவரங்கள் இங்கே.
நாளை நடைபெறும் கேட் தேர்வு மொத்தம் மூன்று அமர்வுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
• முதல் அமர்வு: காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை.
• இரண்டாவது அமர்வு: மதியம் 12.30 மணி முதல் 2.30 மணி வரை.
• மூன்றாவது அமர்வு: மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை.
தேர்வர்கள் தங்கள் ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கு முன்னதாகவே தேர்வு மையத்திற்குச் சென்றுவிட வேண்டும்.
தேர்வு மையத்திற்குச் செல்லும் மாணவர்கள் பின்வரும் ஆவணங்களைக் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்:
1. ஹால் டிக்கெட்: A4 அளவு தாளில் பிரிண்ட் செய்யப்பட்ட அசல் CAT 2025 ஹால் டிக்கெட்.
2. அடையாள அட்டை: ஆதார் அட்டை (Aadhaar Card), பான் அட்டை (PAN Card) அல்லது இந்திய பாஸ்போர்ட் போன்ற அசல் அடையாள அட்டை அவசியம்.
3. புகைப்படம்: விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அதே புகைப்படத்தை, ஹால் டிக்கெட்டில் அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் ஒட்டியிருக்க வேண்டும்.
4. தேவைப்படுபவர்களுக்கு ஸ்க்ரைப் (Scribe) உறுதிமொழி பத்திரம்.
தேர்வர்கள் தடிமனான அடிப்பாகம் (Thick soles) கொண்ட காலணிகளை அணியக்கூடாது. அதேபோல, பெரிய பட்டன்கள் (Large buttons) கொண்ட ஆடைகளையும் அணிய அனுமதி இல்லை.
கீழ்க்கண்ட பொருட்களைத் தேர்வுக் கூடத்திற்குள் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது:
• மொபைல் போன்கள், ப்ளூடூத் சாதனங்கள் மற்றும் எலக்ட்ரானிக் கேஜெட்டுகள்.
• வாட்ச் (கடிகாரம்), கால்குலேட்டர்கள் மற்றும் பர்ஸ் (Wallet).
• உலோகம் கலந்த நகைகள் (Jewellery containing metal) மற்றும் கூலிங் கிளாஸ் (Goggles).
• பேனா மற்றும் சொந்த ஸ்டேஷனரி பொருட்கள்.
• பேனா வழங்கப்படும்: தேர்வர்களுக்குத் தேவையான ஒரு பேனா மற்றும் குறிப்புகள் எழுத ஒரு ஸ்கிரிப்பிள் பேட் (Scribble pad) ஆகியவை தேர்வு மையத்திலேயே வழங்கப்படும்.
• எச்சரிக்கை - கீபோர்ட் (Keyboard): ஆன்லைன் தேர்வின் போது, எந்தக் காரணத்தைக் கொண்டும் கீபோர்டைப் பயன்படுத்தக் கூடாது. மவுஸை (Mouse) மட்டுமே பயன்படுத்த வேண்டும். தவறுதலாகக் கீபோர்டைப் பயன்படுத்தினால், கம்ப்யூட்டர் சிஸ்டம் லாக் (Lock) ஆகிவிடும் அபாயம் உள்ளது.
• திரும்ப ஒப்படைத்தல்: தேர்வு முடிந்த பிறகு, ஹால் டிக்கெட் மற்றும் குறிப்பு எழுதிய பேட் (Scribble pad) ஆகியவற்றை அங்கிருக்கும் பெட்டியில் போட்டுவிட்டுத் தான் வர வேண்டும்.
தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் அல்லது தேர்வு தொடர்பான எந்தத் தகவலையும் வாய்மொழியாகவோ, எழுத்துப்பூர்வமாகவோ அல்லது சமூக ஊடகங்களிலோ பகிர்வதில்லை என்ற ரகசியக் காப்பு ஒப்பந்தத்தை (Non-disclosure agreement) மாணவர்கள் ஏற்க வேண்டும்.