"இது என்னுடைய வாழ்க்கையாக இருக்க முடியாது" - ரெட்டிட் (Reddit) தளத்தில் 22 வயது நிரம்பிய இளம் ஊழியர் ஒருவர் பதிவிட்ட இந்த நான்கு வார்த்தைகள், இன்று உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களின் மனநிலையை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. வாடிக்கையாளர் சேவை (Customer Service), விற்பனை (Sales) மற்றும் ஆபரேஷன்ஸ் போன்ற துறைகளில் ஆரம்பக்கட்ட வேலையில் இருக்கும் பலருக்கு, தினசரி வேலை என்பது ஒரு சலிப்பூட்டும் சுழற்சியாகவே மாறிவிட்டது.
26
முடிவே இல்லாத இலக்குகள்
காலை 9 மணிக்குத் தொடங்கும் வேலை, இலக்குகள் (Targets), அறிக்கைகள் மற்றும் மீட்டிங்குகள் என நீள்கிறது. மாலையில் அந்த நாளுக்கான இலக்கை முடித்தாலும், அடுத்த நாள் காலையில் மீண்டும் அதே ஓட்டம் பூஜ்யத்தில் இருந்து தொடங்குகிறது. "எவ்வளவுதான் ஓடினாலும் ஒரே இடத்தில்தான் இருக்கிறோம்" என்ற உணர்வு இவர்களுக்கு ஏற்படுவதாக அந்த இளைஞர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். காலாண்டுக்கு ஒருமுறை புதிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டாலும், அவர்களின் சம்பளத்திலோ அல்லது பதவி உயர்விலோ எந்த மாற்றமும் இருப்பதில்லை.
36
ஆய்வுகள் சொல்லும் அதிர்ச்சித் தகவல்
இந்த விரக்தி மனநிலை தனிப்பட்ட ஒருவரின் பிரச்சனை மட்டுமல்ல. காலப் (Gallup) நிறுவனம் நடத்திய சமீபத்திய ஆய்வின்படி, உலகம் முழுவதும் வெறும் 21% ஊழியர்கள் மட்டுமே தங்கள் வேலையில் ஈடுபாட்டுடன் இருக்கிறார்கள். மீதமுள்ளவர்கள் வேலையில் இருந்து துண்டிக்கப்பட்டவர்களாகவே உணர்கிறார்கள். குறிப்பாக, 35 வயதுக்குட்பட்ட இளம் ஊழியர்களிடம் மன அழுத்தம் (Stress) அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
"இப்போது கஷ்டப்பட்டு உழைத்தால் பிற்காலத்தில் வாழ்க்கை எளிதாகும்" என்ற பழைய தத்துவம் இன்றைய சூழலுக்குப் பொருந்தவில்லை என அந்த ரெட்டிட் பதிவு சுட்டிக்காட்டுகிறது. டெல்லாய்ட் (Deloitte) கணக்கெடுப்பின்படி, ஜென்-ஜி (Gen Z) மற்றும் மில்லினியல் ஊழியர்களில் 40% பேர் எப்போதும் மன அழுத்தத்துடனேயே இருக்கிறார்கள். நீண்ட வேலை நேரம், அங்கீகாரமின்மை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு நேரம் இல்லாதது ஆகியவையே இதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
56
பதவி உயர்வு மீதான பயம்
மேலதிகாரியாகப் பதவி உயர்வு பெறுவது கூட இன்றைய இளைஞர்களுக்குப் பெரிய ஈர்ப்பாக இல்லை. காரணம், நடுத்தர மேலாளர்கள் (Middle Managers) அதிக வேலைப்பளு மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாவதை அவர்கள் கண்கூடாகப் பார்க்கிறார்கள். அதிக பொறுப்புகள் வந்தாலும், அதற்கேற்ற மனநிறைவோ அல்லது அதிகாரமோ கிடைப்பதில்லை என்பதால், பதவி உயர்வு என்ற ஏணியில் ஏறவே பலர் தயங்குகிறார்கள்.
66
எச்சரிக்கை மணி
உலக சுகாதார அமைப்பின் (WHO) படி, 'பர்ன்அவுட்' (Burnout) என்பது நிர்வகிக்கப்படாத நாள்பட்ட மன அழுத்தத்தின் விளைவாகும். அந்த 22 வயது இளைஞரின் பதிவு ஒரு தோல்வியின் அடையாளம் அல்ல, அது ஒரு எச்சரிக்கை மணி. இளம் வயதிலேயே வேலையில் சலிப்பும் சோர்வும் ஏற்படுவது இயல்பானதல்ல என்பதை உணர்ந்து, நிறுவனங்கள் தங்கள் பணி கலாச்சாரத்தை மாற்றியமைக்க வேண்டிய நேரம் இது.