ரூ.2,000 நோட்டு வாபஸ்.. தங்கம் வாங்க குவிந்த பொதுமக்கள்.. நகைக்கடைகள் கொடுத்த அதிர்ச்சி..!

First Published May 22, 2023, 8:30 AM IST

நாடு முழுவதும் தற்போது புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டதை அடுத்து நகைக்கடைகளில் 2000 நோட்டுகள் வாங்க மறுப்பதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். 

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி திடீரென அறிவிப்பை வெளியிட்டார். இதனால், ஏழை, நடுத்தர மக்கள், வியாபாரிகள் ஆகியோர் சொல்ல முடியாத துயரத்தை அனுபவித்தனர். தங்களிடம் இருந்த நோட்டுகளை மாற்ற வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் வரிசையில் நின்ற பல பேர் உயிரிழந்தனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு 2017ம் ஆண்டு மார்ச் மாதம் ரூ.2000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. 

இந்நிலையில், தற்போது ரூ.2000 நோட்டு திரும்ப பெறப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. மே 23-ம் தேதி முதல் வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் எனவும் நாள் ஒன்றிற்கு ரூ.20,000 வரை வங்கிகளில் ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து பல்வேறு இடங்களில் ரூ.2000 நோட்டுகளை வாங்குவதில் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. 

குறிப்பாக ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து வாபஸ் பெறப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள நகைக்கடைக்காரர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி வாங்க கூட்டம் அலைமோதி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், பிரபலமான சில நகைகடைகளில் ரூ.2000 நோட்டுகளை வாங்க மறுப்பதாக வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

மேலும், ரூ.2000 நோட்டுகளை கொண்டு தங்கம் வாங்கினால் சில நகைக்கடைகளில் வழக்கமான விலையை விட 5 முதல் 10 சதவீதம் கூடுதலாக விலைக்கு தங்கத்தை விற்பனை செய்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

click me!