
வரி சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வது மூத்த குடிமக்களின் வரி செலுத்தும் பொறுப்பைக் குறைப்பது மட்டுமல்லாமல், நிதி இலக்குகளை அடைவதற்கும் உதவுகிறது. பழைய வருமான வரி முறையில், மூத்த குடிமக்கள் உட்பட வரி செலுத்துவோருக்கு அரசாங்கம் பல சலுகைகளை வழங்குகிறது.
மூத்த குடிமக்களுக்குக் கிடைக்கும் சிறந்த வரிச் சேமிப்பு வாய்ப்புகள் என்னென்ன என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம். இவை முதியவர்கள் வலுவான ஓய்வூதியத நிதியை உருவாக்கவும், மன அழுத்தமில்லாமல் வாழவும் உதவுகின்றன.
ELSS நிதிகள் அல்லது ஈக்விட்டி-இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டங்கள், வரியைச் சேமிக்கும் முதலீட்டு கருவிகளைத் தேடும் முதலீட்டாளர்களுக்கான சிறந்த விருப்பங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளன. சரியான ஃபண்டுகளில் முதலீடு செய்யப்பட்டிருந்தால், மூத்த குடிமக்களுக்கு ELSS முதலீடு ஒரு சிறந்த வழி.
வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் வரி-சேமிப்பு மியூச்சுவல் ஃபண்டுகளான ELSS திட்டங்கள், கணிசமாக வரியைச் சேமிக்க உதவும். ELSS நிதிகளில் ரூ. 1.5 லட்சம் வரையிலான முதலீடுகளுக்கு விலக்கு உண்டு. ஒருவர் SIP அல்லது மொத்த தொகை மூலம் இதில் முதலீடு செய்யலாம்.
மூத்த குடிமக்கள் முதலீட்டாளர்களுக்கு நிலையான வைப்புத்தொகை (FDs) பாதுகாப்பான விருப்பங்களில் ஒன்றாகும். வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு எஃப்.டி.களில் சாதாரண வட்டி விகிதங்களை விட அதிகமாக வழங்குகின்றன.
வரி சேமிப்பு FDகள் ரூ. 1.5 லட்சம் வரை விலக்கு அளிக்கப்படுகின்றன. அத்தகைய FDகள் 5 வருட லாக்-இன் காலத்துடன் வருகின்றன. இருப்பினும், FD களில் கிடைக்கும் வட்டிக்கு வரி விதிக்கப்படும். வழக்கமாக, வட்டி விகிதம் 5.5% முதல் 7.75% வரை இருக்கும்.
மூத்த குடிமக்களுக்கு, அரசாங்கப் பத்திரங்கள் ஒரு நல்ல முதலீட்டுத் தேர்வாகும். அவற்றிலிருந்து வருமான வரி விலக்கு பெற உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. இந்த பத்திரங்களில் 10 முதல் 15 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம்.
குறைந்த ஆபத்துள்ள முதலீடுகளாகக் கருதப்படும், வரி இல்லாத அரசுப் பத்திரங்கள் அதிக தேவையின் காரணமாக குறைந்த பணப்புழக்கத்தைக் கொண்டிருக்கலாம். ஆனால், சந்தை நிலவரங்களைப் பொறுத்து 5.5% முதல் 7.5% வரை வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா (PMVVY) என்பது மூத்த குடிமக்களுக்கான மத்திய அரசின் முதன்மைத் திட்டமாகும், மேலும் அவர்களுக்கு வழக்கமான வருமானத்தை வழங்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் குறைந்தபட்ச பாலிசி விலை ரூ. 1.5 லட்சம். குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் ரூ.1,000. அதிகபட்ச முதலீட்டு வரம்பு ரூ.15 லட்சம். இந்தத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியத் தொகையானது, முதலீடு செய்யப்பட்ட தொகையைப் பொறுத்து மாதம் ரூ.1,000 முதல் ரூ.10,000 வரை இருக்கலாம்.
தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) என்பது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் அரசாங்க ஆதரவுடைய ஓய்வூதிய சேமிப்புத் திட்டமாகும். 18 முதல் 70 வயது வரை உள்ள அனைத்து குடிமக்களுக்கும் கிடைக்கும். இத்திட்டத்தின் கீழ், 1.5 லட்சம் ரூபாய் வரை வரிவிலக்கு பெறலாம். இதற்கு மேல், ரூபாய் 50,000 வரையிலான பங்களிப்புகளுக்கும் பிரிவு 80CCD(1B)ன் கீழ் விலக்கு அளிக்கப்படுகிறது.
முதலீட்டாளர்கள் தங்கள் பங்களிப்புத் தொகையில் 25% வரை வரி இல்லாமல் திரும்பப் பெறலாம். மேலும், NPS கணக்கின் முதிர்வுத் தொகையில் 40% கார்பஸுடன் வருடாந்திர திட்டத்தில் முதலீடு செய்யவேண்டும். ஆனால் மீது 60% பணத்தை எடுக்கலாம்.
வரி சேமிப்புக்கு வரும்போது சுகாதார காப்பீடு மற்றொரு முக்கியமான கருவியாகும். ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியங்கள் பிரிவு 80D இன் கீழ் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு, இந்த விலக்கு வரம்பு ரூ.30,000 வரையிலும், மூத்த குடிமக்கள் அல்லாதவர்களுக்கு ரூ.20,000 வரையிலும் உள்ளது.
காப்பீட்டுத் திட்டங்கள் உங்களுக்கு காப்பீட்டுப் பாதுகாப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், சரியான திட்டத்தைத் தேர்ந்தெடுத்தால், வரிச் சேமிப்பு மற்றும் முதலீட்டின் பலனையும் தருகிறது.
பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது ஒரு நீண்ட கால முதலீட்டுத் திட்டமாகும். இது அஞ்சல் அலுவலகம் அல்லது வங்கியால் இயக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.500 முதல் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும்.
இத்திட்ட் வழக்கமான வருமானத்தை வழங்காது, ஆனால் அதன் முதிர்வுத் தொகைக்கு முற்றிலும் வரி விலக்கு கிடைக்கும். இது அனைத்து குடிமக்களுக்கும் கிடைக்கும் பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களில் ஒன்றாகும்.